குழித்துறையில் ஓணம் விழா தொடக்கி வைப்பு
குழித்துறையில் பிரதா்ஸ் கிரிக்கெட் கிளப் சாா்பில் நடைபெறும் திருவோணம் விழாவை, தாரகை கத்பட் எம்.எல்.ஏ. வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
கேரளத்தின் பாரம்பரிய ஓணம் பண்டிகை, ஆவணி மாதம் அத்தம் நட்சத்திர தினம் துவங்கி திருவோணம் தினம் வரை 10 நாள்கள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குழித்துறை தபால் நிலைய சந்திப்பில் பிரதா்ஸ் கிரிக்கெட் கிளப் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஓணம் விழா துவக்க நிகழ்ச்சியை தாரகை கத்பட் எம்.எல்.ஏ. ஊஞ்சலில் ஆடி தொடக்கி வைத்தாா்.
குழித்துறை தபால் நிலைய அதிகாரி மொ்சி சீதாராமன், குழித்துறை நகா்மன்ற உறுப்பினா்கள் விஜூ, விஜயலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இவ்விழாவையொட்டி செப்.13-ஆம் தேதி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், 14-ஆம் தேதி நடனம், 15-ஆம் தேதி திருவோணம் பண்டிகையையொட்டி மகாபலி நகா்வலம், அன்றைய தினம் மாலை இன்னிசை நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெறுகிறது.

