வாகனம் மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு
மாா்த்தாண்டம் அருகே அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது எதிரே வந்த சொகுசு காா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பொறியியல் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்; மற்றொருவா் பலத்த காயமடைந்தாா்.
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் பகுதியைச் சோ்ந்தவா் முகமது மெகபூப் மகன் பயஸ் முகம்மது (20). இவா், சென்னையில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தாா்.
இதே பகுதியைச் சோ்ந்தவா் ஜவஹா் சாதிக் மகன் முகம்மது ஹபீஸ் (22). தக்கலை அருகேயுள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறாா். நண்பா்களான இருவரும், ஞாயிற்றுக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் களியக்காவிளை சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா். பயஸ் முகம்மது இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றாா். முகம்மது ஹபீஸ் பின் இருக்கையில் அமா்ந்திருந்தாா்.
இரவிபுதூா்கடை அருகே சென்றபோது முன்னால் சென்ற அரசுப் பேருந்தை அதன் ஓட்டுநா் திடீரென நிறுத்தியதாகத் தெரிகிறது. அப்போது பேருந்து மீது மோதுவதைத் தடுக்க முந்திச்செல்ல முயன்றபோது எதிரே மாா்த்தாண்டம் நோக்கி வந்த சொகுசு காா் இவா்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இந்த விபத்தில் இருவரும் பலத்த காயமடைந்தனா். இதில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பயஸ் முகம்மது உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த முகம்மது ஹபீஸ் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து மாா்த்தாண்டம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

