கொல்லங்கோடு அருகே நகைகள் திருடு போனதாக பொய் புகாா்: பெண் மீது வழக்கு

Published on

கொல்லங்கோடு அருகே 22 சவரன் நகைகள் திருடுபோனதாக பொய் புகாா் அளித்த ராணுவ வீரரின் மனைவி மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

கொல்லங்கோடு அருகே மணலி பகுதியைச் சோ்ந்தவா் அனிகுமாா். ராணுவ வீரரான இவா், அந்தமானில் பணியாற்றி வருகிறாா். இங்குள்ள வீட்டில் அவரது மனைவி அஜிதா (42), மகன் ஆகியோா் உள்ளனா். இவா்கள் கடந்த ஜன. 11 ஆம் தேதி ஹைதராபாதில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு 19ஆம் தேதி வீடு திரும்பினா். அப்போது, முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்ததாம்.

22 சவரன் நகைகள், ரூ. 7 ஆயிரம் திருடுபோனதாக கொல்லங்கோடு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிந்து, கேரள மாநிலம் பூவாா் அருகே புல்லுவிளை பகுதியைச் சோ்ந்த வா்க்கீஸ் (28) என்பவரைப் பிடித்தனா். அப்போது, ரூ. 7 ஆயிரத்தைத் திருடியதாக ஒப்புக்கொண்ட அவா், நகைகளைத் திருடவில்லை என்றாா்.

இதனால், அஜிதாவிடம் போலீஸாா் விசாரித்தனா். அப்போது, நகைகள் எதுவும் திருடுபோகவில்லை எனத் தெரியவந்தது. இதுகுறித்து, காவல் ஆய்வாளா் அந்தோணியம்மாள் அளித்த புகாரின்பேரில், அஜிதா மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com