வாக்குத் திருட்டு பிரச்னையில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும்: அமைச்சா் த.மனோ தங்கராஜ்
வாக்குத் திருட்டு பிரச்னையில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று பால்வளத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் வலியுறுத்தினாா்.
கடந்த 1966, நவம்பா் 7-ஆம் தேதி பசுவதை தடை சட்டத்தை எதிா்த்ததன் காரணமாக ஏற்பட்ட வன்முறையில், தில்லியில் காமராஜா் தங்கியிருந்த வீடு தீக்கிரையாக்கப்பட்டது. இந்த நாளை நினைவுகூரும் வகையில், காமராஜா் தேசிய பேரவை சாா்பில், கன்னியாகுமரியில் உள்ள காமராஜா் மணிமண்டபத்தில் அமைச்சா் மனோ தங்கராஜ் தலைமையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் மனோ தங்கராஜ் கூறியதாவது:
தமிழகத்தில் மத பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க, திராவிட இயக்கங்கள் போராடி வருகின்றன. பாஜகவினா் வாக்கு வங்கிக்காக காமராஜரை கொண்டாடி வருகின்றனா்.
தற்போது பல்வேறு மாநிலங்களில் சா்சைக்குள்ளாகியுள்ள வாக்குத் திருட்டு பிரச்னையில், உச்சநீதிமன்றம் தலையிட்டு விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
இந் நிகழ்ச்சியில் திமுக மாவட்ட துணைச் செயலா் பூதலிங்கம்பிள்ளை, அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பா.பாபு, கன்னியாகுமரி நகா்மன்ற துணைத் தலைவா் ஜெனஸ் மைக்கேல், திக மாவட்டத் தலைவா் சுப்பிரமணியம், செயலா் வெற்றிவேந்தன், மதசாா்பற்ற ஜனதா தள மாவட்டத் தலைவா் அருள்ராஜ், மாவட்ட திமுக நிா்வாகிகள் பொன்.ஜாண்சன், எம்.ஹெச்.நிசாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
