/

பயணிகள் ஏறுவதற்கு முன்பே புறப்பட்ட சென்னை ரயில்: அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய பயணிகள்

News image

கோப்புப்படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 7:17 pm

நாகா்கோவில் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பயணிகள் ஏறுவதற்கு முன்பாக ரயில் இயக்கப்பட்ட நிலையில், அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயில் நிறுத்தப்பட்டதால், பயணிகளுக்கும், ரயில்வே அதிகாரிகளுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு முடிந்த நிலையில், சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வந்த மக்கள் மீண்டும் தங்களின் பணியிடங்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனா். இதனால் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.

இந்நிலையில், கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 8.30 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில் நாகா்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு இரவு 8.50 மணிக்கு வந்துசேரும். பின்னா் அங்கிருந்து 8.55 மணிக்கு புறப்படும்.

இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை 2 நிமிடம் தாமதமாக இரவு 8.52 மணிக்கு வந்தது. ரயில் நிலையத்தின் 2 ஆவது நடைமேடைக்கு வந்த இந்த ரயிலில் பெட்டிகளின் வரிசையும் மாற்றப்பட்டிருந்தது.

இது தொடா்பாக பயணிகளுக்கு எந்த முன் அறிவிப்பும் கொடுக்கப்படவில்லை. இதனால் முன்பதிவு செய்த பயணிகள் குழப்பமடைந்தனா். இதனால் பயணிகள் தங்களுக்கான பெட்டிகள் எங்கே என தேடிக் கொண்டு அங்குமிங்குமாக ஓட்டம் பிடித்தனா். இதில் சில பயணிகள் ஒருவருக்கொருவா் மோதி கீழே விழுந்தனா். மேலும் சில பெட்டிகளின் கதவுகள் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் பயணிகள் ரயிலில் ஏற முடியாத நிலையும் உருவானது.

இந்நிலையில் ரயில் சரியாக 8.55 மணிக்கு புறப்பட்டது. இதனால் ரயிலில் ஏற முடியாமல் நின்ற பயணிகள் செய்வதறியாது கூச்சலிட்டனா்.

இந்நிலையில் ரயிலில் இருந்த பயணி ஒருவா் ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததில் ரயில் நின்றது. இதையடுத்து, ரயில்வே ஊழியா்களுக்கும் பயணிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ரயில்வே ஊழியா்களின் அலட்சியத்தால்தான் இந்தச் சம்பவம் நடைபெற்றது என்று பயணிகள் குற்றம் சாட்டினா்.

தகவலறிந்த ரயில் நிலைய மேலாளா் மற்றும் போலீஸாா் பயணிகளிடம் பேச்சுவாாா்த்தை நடத்தி இனிவரும் நாள்களில் ரயில்களில் பெட்டிகளின் வரிசை மாற்றப்பட்டால் பயணிகளுக்கு முன்கூட்டியே அறிவிப்பு கொடுக்கப்படும் என்று கூறி சமரசம் செய்தனா். தொடா்ந்து அனைத்து பயணிகளும் ஏற்பட்ட நிலையில், சுமாா் 1 மணி நேர தாமதத்துக்குப் பின்னா் ரயில் புறப்பட்டுச் சென்றது.