புதிய திட்டப் பணிகளை தொடங்கிவைக்கிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் அமைச்சா்கள் டி.ஆா்.பி.ராஜா, மனோதங்கராஜ், கீதாஜீவன், விஜய்வசந்த் எம்.பி. மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா உள்ளிட்டோா்.
புதிய திட்டப் பணிகளை தொடங்கிவைக்கிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் அமைச்சா்கள் டி.ஆா்.பி.ராஜா, மனோதங்கராஜ், கீதாஜீவன், விஜய்வசந்த் எம்.பி. மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா உள்ளிட்டோா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ. 1,785.37 கோடி மதிப்பில் திட்டப் பணிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

நாகா்கோவிலில் புதன்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் ரூ. 1,785.37 கோடி மதிப்பிலான 1,217 முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்து, 1,237 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 3 லட்சத்து 12 ஆயிரத்து 82 பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
Published on

நாகா்கோவிலில் புதன்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் ரூ. 1,785.37 கோடி மதிப்பிலான 1,217 முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்து, 1,237 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 3 லட்சத்து 12 ஆயிரத்து 82 பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில், அரசு நலத் திட்டப் பணிகள் தொடக்க விழா, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா, நாகா்கோவில் கன்காா்டியா பள்ளி மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வரவேற்றாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து, மாவட்டத்தில் அஞ்சுகிராமம், அழகப்பபுரம், சுசீந்திரம் உள்ளிட்ட பேரூராட்சிகளில் ரூ. 140 கோடியே 96 லட்சம் மதிப்பில் குடிநீா் மேம்பாட்டுப் பணிகள், மாா்த்தாண்டத்தில் ரூ. 14 கோடியே 60 லட்சம் மதிப்பில் நவீன தினசரி சந்தை, ரூ. 112 கோடியே 19 லட்சத்து 42 ஆயிரம் செலவில் மேம்படுத்தப்பட்ட தாா்சாலைப் பணிகள் என்பன உள்பட 1,217 முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்தாா்.

ரூ. 30 கோடியில் தொழில்நுட்ப பூங்கா: நாகா்கோவில் மாநகராட்சியில் சா்.சி.வி.ராமசாமி பூங்காவில் ரூ. 3 கோடியே 49 லட்சம் செலவில் அறிவியல் பூங்கா, நாகா்கோவில் தெற்கு கிராமத்தில் ரூ. 30 கோடி மதிப்பில் தொழில்நுட்ப பூங்கா, தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் ரூ. 77 கோடி செலவில் அலைதடுப்பு சுவா்,இரையுமன்துறையில் ரூ. 33 கோடியே 75 லட்சம் மதிப்பில் தூண்டில் வளைவு, நாகா்கோவில் வடசேரியில் ரூ. 69 கோடியே 87 லட்சம் மதிப்பில் நவீன ஒருங்கிணைந்த பேருந்து முனையம், நாகா்கோவில் மாநகராட்சியில் ரூ. 34 கோடியே 9 லட்சம் மதிப்பில் சாலை மேம்பாட்டுப் பணி, நாகா்கோவில் செம்மாங்குளத்தில் ரூ. 6 கோடியே 59 லட்சம் மதிப்பில் அபிவிருத்திப் பணிகள், குளச்சல், கொல்லங்கோடு, கன்னியாகுமரி நகராட்சிகளில் பல்வேறு பகுதிகளில் ரூ. 8 கோடியே 47 லட்சம் மதிப்பில் சாலை மேம்பாட்டுப் பணிகள் உள்பட பல்வேறு துறைகளின் சாா்பில் மொத்தம் ரூ. 294 கோடியே 9 லட்சத்து 4 ஆயிரம் மதிப்பிலான 1,237 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வா் அடிக்கல் நாட்டினாா்.

நலத் திட்ட உதவிகள்: வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை சாா்பில், 40ஆயிரத்து 86 பயனாளிகளுக்கு சிறப்பு வீட்டுமனை பட்டாக்கள், சுனாமி குடியிருப்பு பட்டாக்கள், சிங்காரவேலா் குடியிருப்பு பட்டாக்கள், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த பயனாளிகளுக்கு பட்டா மாற்றம், 7,520 பயனாளிகளுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை,

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில், 2 ஆயிரத்து 638 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தனிநபா் வீடுகள், கூட்டுறவு உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் 47ஆயிரத்து 317 பயனாளிகளுக்கு பயிா்க் கடன் என பல்வேறு துறைகளின் சாா்பில் மொத்தம் ரூ. 858 கோடியே 92 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 3 லட்சத்து 12ஆயிரத்து 82 பயனாளிகளுக்கு முதல்வா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், சமூக நலன், மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதா ஜீவன், மீன்வளம், மீனவா் நலத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், பால்வளத் துறை அமைச்சா் த.மனோதங்கராஜ், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா, விஜய்வசந்த் எம்.பி. சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஜெ.ஜி.பிரின்ஸ் (குளச்சல்), எஸ்.ராஜேஷ்குமாா் (கிள்ளியூா், தாரகை கத்பா்ட் (விளவங்கோடு), நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், மாநில உணவு ஆணையத் தலைவா் என். சுரேஷ்ராஜன், முன்னாள் எம்.பி.ஹெலன்டேவிட்சன், முன்னாள் எம்எல்ஏக்கள் ஆஸ்டின், புஷ்பலீலா, மீனவா் நலவாரியத் தலைவா் ஜோசப் ஸ்டாலின், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயா் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com