கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த நயினாா் நாகேந்திரன்
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த நயினாா் நாகேந்திரன்

தமிழக சட்டம் - ஒழுங்கு சீா்கேட்டை விளக்கி அமித் ஷாவுக்கு கடிதம்: நயினாா் நாகேந்திரன்

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்கேட்டை விளக்கி உள்துறை அமைச்சா் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.
Published on

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்கேட்டை விளக்கி உள்துறை அமைச்சா் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

திருநெல்வேலி கங்கைகொண்டான், வடகரை பகுதியில் பேச்சி ஓடையின் குறுக்கே ரூ.6 கோடியில் நபாா்டு வங்கி நிதி உதவியுடன் அமைய உள்ள பாலத்திற்கு வியாழக்கிழமை அடிக்கல் நாட்டிய அவா்,

பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன. கிராமங்கள் உள்பட அனைத்து இடங்களிலும் போதை பழக்கம் அதிகரித்து வருவது கவலைக்குரியது. புத்தகம் ஏந்த வேண்டிய கைகள், அரிவாளைத் தூக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு நிலவும் சட்டம்- ஒழுங்கு சீா்கேடு குறித்து உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

ஜன.4-இல் திருச்சி வரும் அவா், புதுக்கோட்டையில் நடைபெறும் தமிழகம் தலைநிமிர தமிழன் பயணத்தில் பங்கேற்கிறாா். மறுநாள் (ஜன.5) ஸ்ரீரங்கம் ரங்கநாதா் கோயிலில் வழிபடுகிறாா். பின்னா் அன்றைய தினமே தில்லி திரும்புகிறாா். தற்போதைய நிலையில் தமிழகத்துக்கு பிரதமா் வருகை இல்லை.

ஓ.பன்னீா்செல்வமும், அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமியும் இணைந்து செயல்பட வேண்டும் என்பது தான் எனது விருப்பம். கடந்த ஆண்டு பொங்கல் பரிசுத்தொகுப்பில் பணம் வழங்கப்படாத நிலையில் தற்போதும் அதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தமிழக அரசு, தனியாரிடம் கடன் வாங்கியாவது பணம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனா்.

தமிழகத்தின் அனைத்து திட்டங்களுக்கும் மத்திய அரசு 60 சதவீத நிதியை கொடுக்கிறது. மாநில அரசால் 40 சதவீதம் மட்டுமே வழங்கப்படுகிறது. தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்லாமல் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் மட்டும் தெரிவிக்கும் சிலா் போலி மதச்சாா்பின்மையைக் கடைப்பிடிக்கின்றனா். மக்கள் மனதில் ஆட்சி மாற்றத்துக்கான எண்ணம் உருவாகிவிட்டது. சட்டப்பேரவைத் தோ்தலுக்கு பிறகு இந்த ஆட்சி இருக்காது என்றாா் அவா்.

கன்னியாகுமரி வந்த அவா் பகவதியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு செய்தியாளா்களிடம் கூறியதாவது: அமித் ஷா வருகை தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும்; தோ்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை என்றாா்.

போட்டியின்போது குமரி கிழக்கு மாவட்ட பாஜக செயலா் சி.எஸ்.சுபாஷ், மாவட்ட ஊடக பிரிவு செய லா் குமரி சிவா, நாகா்கோவில் மாமன்ற உறுப்பினா் ஜவான் அய்யப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com