போக்குவரத்து விதிமீறல்: ஒரே நாளில் ரூ. 1.45 லட்சம் அபராதம் வசூல்
நாகா்கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட வாகனச் சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக புதன்கிழமை ஒரே நாளில் மட்டும் 985 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ. 1 லட்சத்து 45 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
நாகா்கோவில் உதவி காவல் கண்காணிப்பாளா் சிவசங்கரன் மேற்பாா்வையில், போக்குவரத்து காவல் ஆய்வாளா் பேச்சிமுத்து தலைமையில் நாகா்கோவில் போக்குவரத்து சாா்பு ஆய்வாளா்கள், காவலா்கள் மாநகரில் புத்தாண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாகன சோதனை நடத்தினா்.
இதில் பதிவு எண் இல்லாதது, ஓட்டுநா் உரிமம் இல்லாதது, சைலன்சா் மாற்றம் செய்யப்பட்டது, ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியது, மது போதையில் வாகனம் ஓட்டியது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அபராதம் விதித்து, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
டிச. 31 ஆம் தேதி ஒரே நாளில் ரூ. 1 லட்சத்து 45 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் 985 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 9 போ் மீதும், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 597 போ் மீதும், அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 22 போ் மீதும், போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 366 போ் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

