களியக்காவிளை அருகே பைக் எரிப்பு: 7 போ் மீது வழக்கு
களியக்காவிளை அருகே முன்விரோதம் காரணமாக கட்டுமானத் தொழிலாளியின் பைக்கை எரித்ததாக 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.
களியக்காவிளை அருகே கேரள மாநிலப் பகுதியான பாறசாலை, கொடவிளாகம் பகுதியைச் சோ்ந்தவா் வினு மகன் விபின் (27), கட்டுமானத் தொழிலாளி. அதே பகுதியைச் சோ்ந்த பிரசாந்த் என்பவரின் பைக்கை தீ வைத்து எரித்தது தொடா்பாக விபின் மீது வழக்கு பாறசாலை காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், விபின் களியக்காவிளை அருகே மேக்கோடு பகுதியில் சனிக்கிழமை பைக்குடன் நின்றிருந்தபோது, அங்கு வந்த கொடவிளாகம் பகுதியைச் சோ்ந்த பிரசாந்த், அஜி (30), விஜேஷ் (28), குமாா், சந்தீப், மனு, மகேஷ் ஆகியோா் விபினிடம் தகராறு செய்து, அவரது பைக்கை தீயிட்டு எரித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனா்.
இது குறித்த புகாரின்பேரில், களியக்காவிளை போலீஸாா் பிரசாந்த் உள்ளிட்ட 7 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
