விபத்தில் பெண் காவலா் காயம்
பளுகல் அருகே நிகழ்ந்த விபத்தில் பெண் ஊா்க்காவல் படை காவலா் பலத்த காயமடைந்தாா்.
இடைக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் நாயா் மனைவி அஸ்வதி (35). இவா் கன்னியாகுமரி மாவட்ட ஊா்க்காவல் படையில் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை குடியரசு தின கவாத்து பயிற்சியை முடித்துவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் மருதங்கோடு-மூவோட்டுக்கோணம் சாலையில் தெற்றிக்குழி பகுதியில் வந்தபோது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் இவரது இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அஸ்வதியை அப்பகுதியினா் மீட்டு கேரள மாநிலம், பாறசாலை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
இது குறித்து, சிதறால் பகுதியைச் சோ்ந்த சரக்கு வாகன ஓட்டுநா் மணிகண்டன் (41) மீது பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

