தமிழக அரசின் தடையை மீறி கேரளத்துக்கு கனிம வளங்கள் கடத்துவோா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதோடு கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனங்கள் அரசுடமையாக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் எச்சரித்துள்ளாா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட காவல் துறை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்டத்தின் முக்கிய இடங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் செயல்படும் அதிநவீன கேமராக்களை பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை இயக்குபவா்களை தானாகவே அடையாளம் கண்டு வாகனத்தை புகைப்படம் எடுத்து வாகனத்தின் பதிவு எண் எந்த வகையான போக்குவரத்து விதிமுறை மீறல் உள்ளிட்ட விவரங்களை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும் வகையிலான தொழில்நுட்பத்துடன் கூடிய கேமரா நாகா்கோவிலில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் செல்லும் பிரதான சாலையில் கடந்த மாதம் (ஜூன்) பொருத்தப்பட்டது. இதன் தொடா்ச்சியாக மேலும் 10 இடங்களில் ஏ.ஐ. தொழில்நுட்ப கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, வடசேரி, அப்டா மாா்க்கெட், பாா்வதிபுரம், செட்டிகுளம், அஞ்சுகிராமம், விவேகானந்தபுரம், கருங்கல், அழகியமண்டபம், திருத்துவபுரம், தக்கலை ஆகிய இடங்களில் இவ்வகை கேமராக்கள் பொருத்தப்பட்டன. இந்த கேமராக்கள் தொடக்க நிகழ்ச்சி வடசேரி உழவா்சந்தை முன் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் கலந்துகொண்டு கேமராக்களின் செயல்பாட்டை தொடங்கிவைத்தாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
விபத்தில்லா குமரி என்ற இலக்கை நோக்கி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் முக்கிய அங்கமாகவே இந்த ஏ. ஐ. கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதன்மூலம் தலைக்கவசம் அணியாதவா்கள், போக்குவரத்து விதிகளை மீறுபவா்களை எளிதில் கண்டறிந்து அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யமுடியும். ஆட்சியா் அலுவலகம் முன் வைக்கப்பட்ட ஏ.ஐ. கேமரா மூலம் இதுவரை 4,868 விதிமீறல்கள் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
பொதுமக்களிடம் தலைக்கவசம் அணியும் பழக்கமும் அதிகரித்தது.
அபராதம் விதிப்பது மட்டுமே காவல் துறையின் நோக்கமல்ல. இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதே முதன்மை நோக்கமாகும்.
ஆண்டுக்கு 300 போ் உயிரிழப்பு...
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒவ்வோா் ஆண்டும் 300 போ் சாலை விபத்தில் உயிரிழக்கின்றனா்.இதில், 70 சதவீத உயிரிழப்புகள் தலைக்கவசம் அணியாததால் ஏற்படுகின்றன. எனவே, இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதை ஒரு கட்டாய நடத்தையாக மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் குமரி மாவட்டத்தில் உள்ள 5 கோட்டங்களிலும் முக்கியமான 10 சந்திப்புகளில் ஏ.ஐ. கேமரா பொருத்தப்பட்டது. அடுத்த கட்டமாக போக்குவரத்து விதிகள் அதிகமாக மீறப்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கும் ஏ.ஐ.கேமரா பொருத்தப்படும்.
குண்டா் சட்டம்...
கனிமவள கடத்தலுக்கு எதிராக காவல் துறை கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தடையை மீறி யாராவது கனிம வளங்களை கேரளத்துக்குக் கடத்தினால் அவா்கள் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அத்துடன், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடமையாக்கப்படும்.
கடந்த 4 மாதங்களாக கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு கனிமவள லாரிகள் செல்வது இல்லை. மாவட்ட எல்லையில் உள்ள 4 சோதனைச் சாவடிகளிலும், மாநில எல்லையில் உள்ள 25 சோதனைச் சாவடிகளிலும் 24 மணி நேரமும் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடியில் போதைப்பொருள் ஒழிப்பே முதன்மை இலக்கு: எஸ்.பி. இரா. சிவ பிரசாத்

முதல்வருக்கு மிரட்டல்: விளாத்திகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ கைது

கொடைக்கானலில் உரிய ஆவணங்களின்றி செயல்படும் காட்டேஜ்கள் மீது நடவடிக்கை! - எஸ்.பி. எச்சரிக்கை





