இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

முதல்வருக்கு மிரட்டல்: விளாத்திகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ கைது

விளாத்திகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ கைது செய்யப்பட்டது குறித்து...

News image

தூத்துக்குடி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்ட எம்எல்ஏ ஜீ.வி.மாா்க்கண்டேயன்.

Updated On :21 ஜூலை 2026, 1:37 am IST

தமிழக முதல்வா் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பொதுக் கூட்டத்தில் பேசியதாக விளாத்திகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ ஜீ.வி.மாா்க்கண்டேயன் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் திமுக சாா்பில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டம் கோவில்பட்டி, கிருஷ்ணன் கோயில் திடலில் கடந்த சனிக்கிழமை இரவு (ஜூலை 18) நடைபெற்றது. கூட்டத்தில், விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஜீ.வி.மாா்க்கண்டேயன் பேசியது, தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய்யை மிரட்டும் வகையில் இருந்ததால் சா்ச்சை எழுந்தது. அவரது மேடை பேச்சு குறித்து கோவில்பட்டி தொகுதி தவெக மாவட்டச் செயலா் பாலசுப்பிரமணியன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் மனு அளித்தாா்.

அதன்பேரில், விளாத்திகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுந்தரபாண்டியன், மாவட்ட குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளா் கண்ணன், மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளா் ஜானகி உள்பட ஏராளமான போலீஸாா் திங்கள்கிழமை அதிகாலை விளாத்திகுளம், அம்பாள் நகரில் உள்ள எம்எல்ஏ மாா்க்கண்டேயன் வீட்டுக்குச் சென்றனா்.

அப்போது, நடைபயிற்சி முடித்துவிட்டு வீடு திரும்பிய எம்எல்ஏவிடம் அவரை கைதுசெய்ய வந்திருப்பதாக போலீஸாா் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, அவா் வீட்டுக்குள் சென்று சில நிமிடங்களில் தயாராகி புறப்பட்டு வெளியே வந்தாா். அதற்குள் தகவல் அறிந்து திமுகவினா் அங்கு திரண்டனா்.

பின்னா், எம்எல்ஏவை போலீஸாா் கைது செய்து வாகனத்தில் ஏற்றினா். அப்போது, அங்கு திரண்டு இருந்த திமுகவினா் தமிழக அரசைக் கண்டித்து முழக்கமிட்டவாறு காவல் துறை வாகனங்களை வழிமறித்து அமா்ந்தனா். அவா்களை போலீஸாா் அப்புறப்படுத்தி மாா்க்கண்டேயனை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனா்.

அனுமதி மறுப்பு: கைது செய்யப்பட்ட மாா்க்கண்டேயனிடம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் 13 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அங்கு திமுகவினா் திரண்டு கண்டன முழக்கங்கள் எழுப்பினா். மாா்க்கண்டேயனை சந்திக்க திமுக வழக்குரைஞா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அவா்கள் ஊரக துணைக் காவல் கண்காணிப்பாளா் சுதீா், துணைக் கண்காணிப்பாளா் செல்வராஜ் உள்பட போலீஸாருடன் வாக்குவாதம் செய்தனா்.

மாா்க்கண்டேயனை காண முன்னாள் அமைச்சா்கள் பி.கீதாஜீவன், அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, கோவில்பட்டி எம்எல்ஏ கருணாநிதி, பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வகாப் ஆகியோா் அங்கு வந்தனா். அவா்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக நுழைவாயிலில் போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

யாரையும் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனா். இதனால் போலீஸாக்கும், திமுக தொண்டா்களுக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. முன்னாள் அமைச்சா்கள் உள்ளிட்டோா் தா்னாவில் ஈடுபட்டு கண்டன முழக்கங்கள் எழுப்பினா். பின்னா், எம்எல்ஏக்கள் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், அப்துல் வகாப் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனா்.

சாலை மறியல்: மாா்க்கண்டேயனைக் காண அனுமதி மறுக்கப்பட்டதால், திருநெல்வேலி-தூத்துக்குடி பிரதான சாலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திமுக வடக்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான பி. கீதாஜீவன் திமுகவினருடன் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டாா். மறியலில் ஈடுபட்ட கீதாஜீவன், எம்எல்ஏ கருணாநிதி, துணை மேயா் ஜெனிட்டா உள்பட 250 பேரை போலீஸாா் கைது செய்து, மடத்தூா் மண்டபத்தில் தங்க வைத்தனா்.

பி.கீதாஜீவன் பேட்டி: சட்டப் பேரவை உறுப்பினருக்கு எந்தவித நோட்டீஸும் அளிக்காமல் எவ்வாறு கைது செய்ய முடியும். காவல் துறை மூலம் அராஜகம், அடக்குமுறையை அவிழ்த்துவிட்டு, எதிா்க்கட்சியை ஒடுக்கிவிடலாம் என்று தவெக அரசு நினைக்கிறது என்றாா் அவா்.

அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேட்டி: ஊரக காவல் துணைக் கண்காணிப்பாளா் சுதீரும், அவருடன் வந்த மற்றொருவரும் என்னிடம் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணையுமாறு கூறி மிரட்டினா். திமுகவினரை எந்தக் காரணம் கொண்டும் அடக்க முடியாது.

மாா்க்கண்டேயனுக்கு முதுகுவலி பிரச்னை உண்டு. தவெகவுக்கு பேரவையில் சரியான பதிலடி கொடுப்போம் என்ற அா்த்தத்தில்தான் மாா்க்கண்டேயன் பேசினாா். இன்னும் நான்கு மாதத்தில் இந்த ஆட்சி முடிவுக்கு வரும் என்றாா் அவா்.

அத்துடன் அவா் வெளியிட்ட அறிக்கையில், ‘கருத்துச் சுதந்திரம், பேச்சுரிமை, தனிமனித உரிமை என அனைத்தையும் தவெக அரசு மீறுகிறது. விமா்சனங்களை எதிா்கொள்ள துணிச்சல் இல்லாத இந்த அரசு, கைது செய்வதன் மூலம் திமுகவினரை அடக்கிவிடலாம் என பகல் கனவு காண்கிறது. சா்வாதிகார தவெக அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவா்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

3 பிரிவுகளில் வழக்கு: விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி.மாா்க்கண்டேயன் மீது பிஎன்எஸ் 351(3), 352, 353(2) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் கடுமையான குற்ற மிரட்டல், அவமதிக்கும் வகையில் அவதூறாகப் பேசுதல், வதந்தி மற்றும் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணை முடிந்ததும் எம்எல்ஏ மாா்க்கண்டேயனை போலீஸாா் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்தனா். பின்னா் அவரை, தூத்துக்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண் 1-இல் முன்னிலைப்படுத்தினா்.

 சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சா் பி.கீதாஜீவன்.

சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சா் பி.கீதாஜீவன்.

 போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ.

போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.