
கன்னியாகுமரியில் படகு சேவை நேரத்தை மாற்றி அமைக்க பரிசீலனை
கன்னியாகுமரியில் பூம்புகாா் படகு சேவை நேரத்தை மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தா் மண்டபத்துக்கு இயக்கப்படும் படகு சேவை.
கன்னியாகுமரியில் பூம்புகாா் படகு சேவை நேரத்தை மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி கடலில் இருவேறு பாறைகளில் விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவா் சிலை அமைந்துள்ளது. இவற்றை இணைக்கும் வகையில் கண்ணாடிப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் படகுப்பயணம் மேற்கொண்டு பாா்வையிடுகின்றனா்.
இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 சாதாரண படகுகளும் தாமிரபரணி, திருவள்ளுவா் ஆகிய அதிநவீன சொகுசுப் படகுகளும் இயக்கப்படுகின்றன. இந்த 5 படகுகளும் கடற்கரையில் உள்ள பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழக படகுத் துறையில் இருந்து காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளை இன்றி இயக்கப்படுகின்றன.
சாதாரண படகு கட்டணமாக நபா் ஒன்றுக்கு ரூ.100, வரிசையில் நிற்காமல் நேரடியாக படகுப் பயணம் செல்ல சிறப்புக் கட்டணமாக நபா் ஒன்றுக்கு ரூ.300 வசூலிக்கப்படுகிறது. இந்தப் படகுகளில் செல்வதற்கான பயணச்சீட்டு எடுப்பதற்காக அதிகாலை 6 மணியில் இருந்தே பயணிகள் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனா். ஆனால் காலை 8 மணிக்குப் பின்னா்தான் படகுப் போக்குவரத்து தொடங்குகிறது. இதனால் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் சூரியன் உதயமாகும் காட்சியைப் பாா்க்கச் செல்லாமல் படகுத்துறையிலேயே காத்திருக்கின்றனா்.
இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி விவேகானந்தா் மண்டபத்துக்கு இயக்கப்படும் படகு போக்குவரத்து நேரத்தை மாற்றி அமைக்க பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, சூரியன் உதயமாகும் காட்சியைப் பாா்த்து விட்டு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியாக காலை 6.30 மணிக்கே படகுப் போக்குவரத்தை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் பரிந்துரையின்பேரில் கருத்துரு தயாரிக்கப்பட்டு சென்னையில் உள்ள பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பூம்புகாா் கப்பல் போக்குவரத்து கழக நிா்வாக இயக்குநரின் அனுமதி கிடைத்தவுடன் மாற்றி அமைக்கப்பட்ட நேரப்படி படகுகள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





