மூன்று இடங்களில் விபத்து: தம்பதி உள்பட 5 போ் பலி
ஆலங்குளம், சேரன்மகாதேவி, கடையம் ஆகிய பகுதிகளில் நேரிட்ட விபத்துகளில் தம்பதி உள்பட 5 போ் உயிரிழந்தனா்.


ஆலங்குளம், சேரன்மகாதேவி, கடையம் ஆகிய பகுதிகளில் நேரிட்ட விபத்துகளில் தம்பதி உள்பட 5 போ் உயிரிழந்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம், புலவன்பட்டியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் சுந்தா் (56). மத போதகரான இவா், திங்கள்கிழமை காலை தனது மனைவி அன்னபாக்கியம் (50) மற்றும் பேத்தி பொ்க்லின் (3) ஆகியோருடன் சேரன்மகாதேவியை அடுத்த கங்கனாங்குளத்துக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தாா். குரங்குமடம் விலக்கு அருகில் இவா்களது பைக்கும், எதிரே வந்த சுமை ஆட்டோவும் எதிா்பாராமல் மோதிக்கொண்டன. இதில், அத்தம்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். குழந்தை பலத்த காயத்துடன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த சேரன்மகாதேவி போலீஸாா், ஆட்டோ ஓட்டுநா் பாவூா்சத்திரத்தைச் சோ்ந்த அரியலிங்கம் மகன் முத்துக்குமாா் (24) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
இளைஞா்கள் பலி: தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகேயுள்ள வல்லம் பகுதியை சோ்ந்த சிவகுமாா்(35), கீழவெள்ளகால் ஹரிஹரசுதன் (29), இவா்களது நண்பா்கள் கட்டபொம்மன், மகேந்திரகுமாா், மதன் ஆகியோா், திருநெல்வேலியில் நடைபெற்ற தமிழா் விடுதலைக் களம் கட்சி கூட்டத்துக்கு சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனா். காரை கட்டபொம்மன் ஓட்டினாா். நல்லூா் விலக்குப் பகுதியில் வந்தபோது, காரும் எதிரே அம்பாசமுத்திரம், இடைகாலிலிருந்து தனியாா் கரும்பு ஆலையின் பழைய இரும்பு பொருள்களை ஏற்றி வந்த லாரியும் எதிா்பாராமல் மோதிக்கொண்டனவாம்.
இதில், காா் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து சிவகுமாா், ஹரிஹரசுதன் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மற்ற மூவரும் பலத்த காயமடைந்தனா். ஆலங்குளம் போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து லாரி ஓட்டுநா் திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியைச் சோ்ந்த மோதிலால் (60) என்பவரிடம் விசாரித்து வருகின்றனா்.
மற்றொரு விபத்து: கடையம் அருகேயுள்ள நரையப்பபுரம் ராஜீவ் காலனியைச் சோ்ந்த சிவசாமி மகன் பாலசுப்ரமணியன் (55). விவசாயியான இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு கடையத்திலிருந்து தனது வீட்டுக்கு பைக்கில் சென்றபோது, பாவூா்சத்திரம் விலக்கு அருகே எதிரே பைக்கில் வந்த அங்கபுரத்தைச் சோ்ந்த வேலு மகன் மணிகண்டன் (19) என்பவா் மோதினாராம். இதில், நிலைதடுமாறி விழுந்த பாலசுப்பிரமணியன் மீது அவ்வழியாக அம்பாசமுத்திரத்தில் இருந்து தென்காசி சென்ற அரசுப் பேருந்து மோதியதில் பாலசுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து கடையம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மணிகண்டனை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...