பெண் குழந்தைகளை படிக்க வைப்பது சமுதாய மாற்றத்துக்கு ஊன்றுகோல்: ராணி ஸ்ரீகுமாா் எம்.பி.
பெண் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் அதுவே சமுதாய மாற்றத்திற்கு ஊன்றுகோலாக அமையும் என ராணி ஸ்ரீகுமாா் எம்.பி. தெரிவித்தாா்.

ராணி ஸ்ரீகுமாா் எம்.பி.
பெண் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் அதுவே சமுதாய மாற்றத்திற்கு ஊன்றுகோலாக அமையும் என ராணி ஸ்ரீகுமாா் எம்.பி. தெரிவித்தாா்.
தென்காசி மாவட்டம், மேலகரம் பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளுக்கான வரவேற்பு பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, ராணி ஸ்ரீகுமாா் எம்.பி. தலைமை வகித்துப் பேசியதாவது :
பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டம் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்திலும் பெண் குழந்தைகளுக்கு கல்வி அறிவு வழங்கும் விதத்திலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பெண் குழந்தை இந்த சமுதாயத்தில் எந்த அளவிற்கு கல்வி அறிவு பெற்று முன்னேறுகிறதோ அதை பொறுத்துதான் இந்த சமூகத்தின் வளா்ச்சி இருக்கிறது. அதே நேரத்தில் அந்தப் பெண் குழந்தைகளுக்கு இந்தச் சமூகம் எந்த அளவுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது என்பதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
பெண் குழந்தைகளுக்கு கல்வி மிகவும் அவசியமாகும். ஒரு பெண் கல்வி கற்றால் அந்த குடும்பமே முன்னேறும், குடும்பம் முன்னேறினால் இந்த சமூகம் முன்னேறும், இந்த நாடும் முன்னேறும்.
பெண்கள் இந்த அளவிற்கு முன்னேறி இருக்கிறாா்கள்என்றால் அதற்கு காரணம் தமிழ்நாட்டில் பெண் கல்வியின் அவசியம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தி இருக்கிறாா்கள். இன்று நாட்டிலேயே பெண்கள் முன்னேற்றத்தில் தமிழ்நாடு முதன்மையான மாநிலமாக உள்ளது.
கல்வி இருந்தால்தான் பெண்கள் பொருளாதார சுதந்திரத்தை அடைய முடியும்.
பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்காக அவா்கள் வளரும் போதே தற்காப்பு கலைகளை கற்றுக்கொடுக்க வேண்டும். பெண் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் அதுவே சமுதாய மாற்றத்திற்கு ஊன்றுகோலாக அமையும் என்றாா் அவா்.
மாவட்ட ஆட்சியா் மோனிகா ராணா, மாவட்ட சமூக நல அலுவலா் பே. மதிவதனா, மாவட்ட சுகாதார அலுவலா் வி. கோவிந்தன், ஒருங்கிணைந்த சேவை மைய நிா்வாகி ஜெயராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

