வாகன ஓட்டிகளை மிரட்டும் மாடுகள்; தொடரும் விபத்துகள் நடவடிக்கையை தீவிரப்படுத்துமா மாநகராட்சி?
திருநெல்வேலி மாநகரில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் தொடர்ச்சியாக விபத்து ஏற்பட்டு வருகிறது.


திருநெல்வேலி மாநகரில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் தொடர்ச்சியாக விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே, சாலைகளில் திரியும் மாடுகளை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பாளையங்கோட்டை, புதிய பேருந்து நிலையம், வண்ணார்பேட்டை, வடக்கு மற்றும் தெற்கு புறவழிச்சாலை, மேலப்பாளையம், திருநெல்வேலி சந்திப்பு, திருநெல்வேலி நகரம், கேடிசி நகர், வி.எம்.சத்திரம், பெருமாள்புரம் என மாநகரம் முழுவதும் ஏராளமான மாடுகள் இரவு பகலாக சாலைகளில் தொடர்ந்து சுற்றி வருகின்றன.
குறிப்பாக திருநெல்வேலி நகரத்தின் 4 ரத வீதிகளிலும் இரவில் ஏராளமான மாடுகள் திரிகின்றன. ஹோட்டல்களில் இருந்து வீசப்படும் இலைகள், குப்பைகள் உள்ளிடவற்றை தேடி இவை அலைகின்றன. பின்னர் இரவில் சாலைகளின் நடுவே படுத்துக் கிடக்கின்றன. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர், மாடு இருப்பது தெரியாமல் அதன் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றனர். இதுதவிர சாலையில் செல்லும் வாகனங்களுக்கு குறுக்கே திடீரென மாடுகள் செல்வதால் விபத்துகள் நிகழ்கின்றன. இதனால் உயிரிழப்பு ஏற்படுவதும், காயமடைவதும் தொடர் கதையாகி வருகிறது.
கடந்த மாதம் சுத்தமல்லி ரயில் நகர் பகுதியில் மாடு குறுக்கே சென்றதால் ஆட்டோ கவிழ்ந்ததில் 2 வயது சிறுமி உயிரிழந்தாள். சில தினங்களுக்கு முன்பு கே.டி.சி. நகர் பகுதியில் முத்துக்கிருஷ்ணன் நாராயணன் என்பவர் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது மாடு குறுக்கே சென்றதில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார்.
பறிமுதல் செய்ய வேண்டும்: எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி கூறியது: "மேலப்பாளையம் பகுதியில் சுற்றித் திரியும் மாடுகளால் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இது தொடர்பாக பலமுறை மாநகராட்சியில் புகார் அளித்துள்ளோம். அவர்களும் அவ்வப்போது மாடுகளை பிடிக்கின்றனர். ஆனால் அடுத்த சில நாள்களில் அதே மாடுகள் மீண்டும் சாலையில் திரிகின்றன. எனவே, மாநகராட்சியால் பிடிக்கப்படும் மாடுகளை பறிமுதல் செய்ய வேண்டும்' என்றார்.
விபத்துகளில் உயிரிழக்கும் மாடுகள்: பெருமாள்புரம் பாரதி நகரைச் சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி கந்தசாமி கூறியது: "புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சாராள் தக்கர் கல்லூரி செல்லும் சாலையில் தினந்தோறும் இரவில் 100-க்கும் மேற்பட்ட மாடுகள் சாலையின் நடுவே படுத்துக் கிடக்கின்றன. சில நேரங்களில் வாகனங்களில் அடிபட்டு மாடுகள் உயிரை விடுவது பரிதாபமாக இருக்கிறது' என்றார்.
அச்சுறுத்தும் மாடுகள்: திருநெல்வேலி நகரம் பாரதியார் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் கூறியது: "இந்தப் பகுதியில் தினந்தோறும் காலையில் குழந்தைகள் பள்ளிக்கு வரும் வேளையில் 10-க்கும் மேற்பட்ட மாடுகள் சாலையை மறித்து நிற்கின்றன.
இந்த மாடுகள் மிரண்டு ஓடுகிறபோது சிலரை முட்டிவிடுகிறது. சில மாதங்களுக்கு முன்பு மாடு முட்டியதில் இப்பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவருக்கு இடுப்பு எலும்பு முறிந்தது. மாடுகளால் காலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது' என்றார்.
சாலையில் மாடு வளர்ப்புத் தொழில்!
பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், "திருநெல்வேலி மாநகரத்தில் ரெட்டியார்பட்டி, கேடிசி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சிலர், மிகக்குறைந்த விலையில் கன்றுகளை வாங்கி சாலைகளில் விட்டுவிடுகின்றனர். அவை பெரிய மாடாக வளர்ந்த பிறகு அதைப் பிடித்து விற்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவ்வாறு தொழில் செய்வோர் மீது நடவடிக்கை எடுத்தாலே, சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிடும்' என்றார்.
சாலையில் திரியும் மாடுகளை ஏலம் விட முடிவு
திருநெல்வேலி மாநகராட்சி நகர்நல அலுவலர் பொற்செல்வன் கூறியது: இதுவரையில் சாலைகளில் திரிந்த 200 மாடுகளை பிடித்துள்ளோம். வழக்கமாக நாங்கள் பிடிக்கும் மாடுகளை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோயிலில் உள்ள கோசாலை மற்றும் சீதபற்பநல்லூரில் உள்ள கோசாலைக்கு அனுப்புகிறோம். மாடு ஒன்றுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கிறோம். மேலும், இனி மாடுகளை சாலைகளில் அவிழ்த்துவிட்டால் மாநகராட்சி என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கலாம் என்ற உத்தரவாதத்தையும் பத்திரத்தில் எழுதி வாங்கிக் கொள்கிறோம். அதன்பிறகே மாடுகள் கோசாலைகளில் இருந்து விடுவிக்கப்படுகின்றன.
ஆனாலும் மாடு வைத்திருப்பவர்கள் தொடர்ந்து சாலைகளில் அவிழ்த்துவிடுகிறார்கள். இனிமேல் இரண்டு நாள்களுக்கு ஒரு முறை சாலைகளில் திரியும் மாடுகளை பிடிக்கும் பணியை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இனி சாலைகளில் திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு ஏலத்தில் விடப்படும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...