/

தேர்தலுக்குப் பின் மக்கள் நீதி மய்யம் காலூன்றி நிற்கும்: கமல்ஹாசன்

மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் மக்கள் நீதி மய்யம் கட்சி காலூன்றி நிற்கும் என்றார் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.

Updated On :25 பிப்ரவரி 2019, 9:55 am IST

மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் மக்கள் நீதி மய்யம் கட்சி காலூன்றி நிற்கும் என்றார் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஓராண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது:
இங்கே முன்வரிசையில் இருக்கிற மக்கள் நீதி மய்யத்தின் பொறுப்பாளர்கள்தான் நாளைய தமிழகம். மக்கள் நீதி மய்யம் எனப் பெயர் வைத்தபோது, அதை கிண்டல் செய்தவர்கள், இப்போது ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
மக்களைக் காக்க வேண்டிய கடமையை மறந்த அரசுகள் மாறி மாறி தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கின்றன. அதற்கு மாற்றைக்  கண்டுபிடிப்போம் என முனைந்ததில் வந்ததுதான் மக்கள் நீதி மையம். மக்களை மேம்படுத்தாத இந்த ஆட்சியை அப்புறப்படுத்துவோம்.
நாடாளுமன்ற தேர்தலுக்காக விருப்ப மனுவை வெளியிட்டுள்ளேன். அவர்களை பரிந்துரைக்க வேண்டியது உங்கள் கடமை. பொறுப்பாக தேர்ந்தெடுப்பது எங்கள் கடமை. மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மட்டுமன்றி, ஊழலை எதிர்க்க நினைக்கும் ஒவ்வொருவரும் வேட்பாளரை தேர்வு செய்வதில் பங்களிக்க வேண்டும்.
நம்மைப் போலவே புதிய தமிழகம் உருவாக வேண்டும் என்ற கனவில் இருப்பவர்கள், நாட்டின் மீது பற்றும், அன்பும் உள்ளவர்கள், இளைஞர்கள், பெண்கள் எங்கள் சார்பில் தேர்தலில் நிற்க வரவேற்கப்படுகிறார்கள். உண்மையான மக்களாட்சி என்ன என்பதை இந்தத் தலைமுறையாவது தெரிந்துகொள்ளட்டும்.
தேர்தலுக்கு பிறகு நடுநிலை தவறாத, நாட்டுக்கு நல்லது நினைக்கும் கட்சியாக, தமிழகத்திற்கு குரல் கொடுக்கும் கட்சியாக மக்கள் நீதி மையம் இருக்கும். மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு மக்கள் நீதி மய்யம் காலூன்றி நிற்கும். நாங்கள் யாருக்கும் "பி' அணி அல்ல, நாங்கள்தான் "ஏ' அணி 
 என்றார் அவர்.
செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீபிரியா, ஜான்சாமுவேல், கமீலா நாசர், மெளரியா, குருவையா, ரங்கராஜன், துணைத் தலைவர் மகேந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்டப் பொறுப்பாளர் செந்தில்குமார் வரவேற்றார். கட்சியின் பொருளாளர் சுகா தலைமை வகித்தார். மண்டல, மாவட்ட பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இணையதளத்தில் தேர்தல் நிதி செலுத்த வசதி
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கு நினைவுப் பரிசாக செங்கோல், வீரவாள், கேடயம் ஆகியவை வழங்கப்பட்டன. மகுடம் இசைக் குழுவினர் பாரம்பரிய இசையை இசைத்தனர். ராணிப்பேட்டையைச் சேர்ந்த இளவழகன், சேலத்தைச் சேர்ந்த மு.நடராஜன், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராமராஜ் ஆகியோர் மேடையில் தேர்தல் நிதியை வழங்கினர். தூத்துக்குடியைச் சேர்ந்த சிறுமி வினிஷா கூட்டத்தின் தொடக்கவுரையாற்றியது அனைவரையும் கவர்ந்தது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை உள்பட தென் மாவட்டங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். கட்சியின் w‌w‌w.‌m​a‌i​a‌m.​c‌o‌m  என்ற இணையதளத்தில்  கட்சிக்கான தேர்தல் நிதியை தொண்டர்கள் செலுத்தலாம்; மக்களவைத் தேர்தலுக்கான விருப்ப மனுவில் தொண்டர்கள் தங்கள் பகுதியில் உள்ள கட்சி சாராதவர்களையும் குறிப்பிட்டு அனுப்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.