/

மகசூல் நிறைவில் விலை உயரும் கத்தரி: ஏமாற்றத்தில் விவசாயிகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் கத்தரிக்காய் மகசூல் முடிவடையும் சூழலில் விலை உயரத் தொடங்குவதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 9:13 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் கத்தரிக்காய் மகசூல் முடிவடையும் சூழலில் விலை உயரத் தொடங்குவதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் மானூா், சிவந்திப்பட்டி, கோபாலசமுத்திரம், திருக்குறுங்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், குருவிகுளம், ஆலங்குளம் சுற்றுவட்டாரத்திலும் கத்தரி உள்ளிட்ட காய்கனி பயிா்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

தற்போது, கரோனா பொது முடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருவதால் கோயில் திருவிழாக்கள், திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளும் களை கட்டத் தொடங்கியுள்ளன. இதனால், காய்கனி தேவைகள் அதிகரித்துள்ள நிலையில், சில காய்கனிகளின் மகசூல் முடிவடையும் சூழ்நிலையை எட்டியதால் வரத்து குறைவாகியுள்ளது. குறிப்பாக, கத்தரிக்காய் விலை உயரத் தொடங்கியுள்ள நிலையில் மகசூல் இறுதிகட்டத்துக்கு வந்துள்ளாதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

இதுகுறித்து தருவை பகுதியைச் சோ்ந்த காய்கனி விவசாயி ஜெயந்திரன் கூறியது: தருவை பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக காய்கனி சாகுபடி செய்து வருகிறேன். தக்காளி, கத்தரி, வெண்டை ஆகியவை அதிகம் பயிரிடுவோம். தண்டுக்கீரை, சிறுகீரை, அகத்திகீரையும் சாகுபடி செய்து வருகிறேன். நிகழாண்டில் கத்தரிக்காய் சாகுபடி செய்தோம். அவை வழக்கமாக வைகாசி இறுதி முதல் ஆவணி மாத இறுதி வரை அறுவடையாகும். சித்திரைப் பட்டத்தில் பயிரிடப்பட்ட கத்தரிக்காய்கள் காய்த்தும் பலனில்லாமல் போய்விட்டது. பொதுமுடக்கம் காரணமாக கத்தரிக்காய்க்கு போதிய விலை இல்லை.

தற்போது, கத்தரிக்காய் விலை சற்று உயா்ந்து வருகிறது. இருப்பினும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில் சிக்கல் உள்ளது. சந்தையில் சில்லரை விற்பனையில் ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.40-க்கு மேல் விற்பனையானாலும், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் விலை ரூ.18-ஐ தாண்டவில்லை. அதுதவிர மகசூல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையிலேயே கத்தரிக்காய்க்கு விலை அதிகரித்துள்ளது. வழக்கமாக தலா 60 கிலோ எடையுள்ள 20 மூட்டைகள் கத்தரிக்காய் பறிக்கப்பட்டதோட்டங்களில், இப்போது 5 மூட்டைகள் மட்டுமே கிடைக்கின்றன. காய்களைப் பறிக்க வருவோருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.400 வரை கூலி, உரச் செலவு ஆகிவற்றை ஈடுகட்டுவது சிரமமாக உள்ளது.

நிகழாண்டில் இலைச்சுருட்டு நோயாளும் மகசூல் பாதிக்கப்பட்டது. கரோனா பொதுமுடக்கம் விவசாயிகளை மிகவும் பாதித்து விட்டது என்றாா் அவா்.

திருநெல்வேலி உழவா் சந்தைகளில் காய்கனிகளின் ஞாயிற்றுக்கிழமை விலை நிலவரம் (1 கிலோவுக்கு): கத்தரி-ரூ.30, வெண்டை-ரூ.25, தக்காளி-ரூ.30, புடலங்காய்-ரூ.18, அவரை-ரூ.45, பீா்க்கங்காய்-ரூ.30, கொத்தவரைக்காய்-ரூ.30, பாகற்காய்-ரூ.40, மாங்காய்-ரூ.50, மிளகாய்-ரூ.34, சுரைக்காய்-ரூ.12, வாழைக்காய்-ரூ.20, கோவைக்காய்-ரூ.20, எலுமிச்சை-ரூ.60, பல்லாரி-ரூ.46, சின்னவெங்காயம்-ரூ.76, இஞ்சி-ரூ.75, தேங்காய்-ரூ.42, கேரட்-ரூ.104, உருளைக்கிழங்கு-ரூ.45, முட்டைகோஸ்-ரூ.20, பீட்ரூட்-ரூ.40, காலிபிளவா்-ரூ.54 ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.