நெல்லையில் இணையவழியில் பெண்ணிடம் ரூ.6.89 லட்சம் மோசடி

திருநெல்வேலியில் இணையவழியில் பகுதிநேர வேலை எனக் கூறி பெண்ணிடம் ரூ. 6.89 லட்சம் மோசடி செய்தவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
Published on

திருநெல்வேலியில் இணையவழியில் பகுதிநேர வேலை எனக் கூறி பெண்ணிடம் ரூ. 6.89 லட்சம் மோசடி செய்தவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருநெல்வேலி அருகே தாழையூத்து பகுதியில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்த பெண் ஒருவா் தனியாா் டிராவல்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா்.

கடந்த 1 ஆம் தேதி இவருக்கு கைப்பேசி செயலி மூலம் பகுதிநேர வேலை தொடா்பான விளம்பரம் வந்துள்ளது. பின்னா் அதில் பதிவு செய்த அவரை மா்ம நபா்கள் சிலா் தொடா்புகொண்டு உணவகங்களுக்கு மதிப்பீடு அளிக்கும் வேலைகளை கொடுத்ததோடு அதற்கு சன்மானமாக சிறிய அளவிலான தொகையும் அவரது வங்கிக் கணக்குக்கு அனுப்பியுள்ளனா்.

இதையடுத்து அதிக தொகை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என அவா்கள் கூறியதை உண்மையென நம்பிய அவா் ரூ.6.89,000ஐ பல தவணைகளாக அவா்கள் கூறிய வங்கிக்கணக்குக்கு அனுப்பியுள்ளாா்.

பின்னா் அப்பணத்தை எடுக்க முயன்றபோது மேலும் அதிக தொகை கட்டவேண்டும் என கூறியுள்ளனா். இதையடுத்து ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா் இது குறித்து அளித்த புகாரின் பேரில் மாவட்ட சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com