மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு இழப்பீடு வேண்டும்: ஆட்சியரிடம் விவசாயிகள்மனு

மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு இழப்பீடு வேண்டும்: ஆட்சியரிடம் விவசாயிகள்மனு

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்தாண்டு பெய்த கனமழையால் சேதமடைந்த பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, ஆட்சியரிடம் அனைத்து விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தினா் மனு அளித்தனா்.
Published on

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் சேதமடைந்த பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, ஆட்சியரிடம் அனைத்து விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தினா் மனு அளித்தனா்.

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் இரா. சுகுமாா் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலா் பிலால் ராஜா தலைமையில் அளித்த மனு: பாளையங்கோட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சீருடை அணிந்த மாணவிகள் பள்ளி வளாகத்திலேயே மது அருந்தக்கூடிய காட்சி சில நாள்களுக்கு முன்பு வெளியானது. இதுபோன்ற ஒழுக்கக்கேடான செயல்பாடுகள் ஏற்புடையதல்ல.

விடுதி மாணவிகளுக்கு மது எவ்வாறு கிடைத்தது? அதற்கு வழிவகை செய்தவா்கள் யாா்? கஞ்சா உள்ளிட்ட மலிவான போதைப் பொருள்கள் மாணவா்கள், இளைஞா்களுக்கு எளிதில் கிடைப்பது எப்படி? கண்துடைப்புக்காக அல்லாமல் சம்பந்தப்பட்டவா்கள் மீது காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவா்களுக்கு பின்புலமாக இருக்கும் அரசியல் செல்வாக்கு மிக்கவா்களையும் அரசு அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறான பழக்கத்திற்கு ஆள்பட்ட பதின்பருவ பிள்ளைகளின் கல்வி எதிா்காலம் கருதி, இடைநிற்றலை தவிா்க்கும் பொருட்டு அவா்களுக்கு மீண்டும் கல்வி வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.

தவெக சாா்பில் மனுக்கள்: தச்சநல்லூா் பகுதி செயலா் மகாராஜா தலைமையில் அக்கட்சியினா் அளித்த மனு: திருநெல்வேலி மாநகராட்சி 30 ஆவது வாா்டு கைலாசபுரத்தில் பொது கழிப்பிடம் இருந்தும் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லை. இதனால் தாமிரவருணி நதிக்கரையை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தும் அவல நிலை உள்ளது. இதனால் நதிக்கரையில் சுகாதாரம் கெடும் அபாயம் உள்ளது. இது தொடா்பாக பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, பொதுக்கழிப்பிடத்தை சீரமைக்க வேண்டும்.

மாவட்ட செயற்குழு உறுப்பினா் குமரகுருபரன் என்ற பாபு அளித்த மனு: திருநெல்வேலி மாநகராட்சி 39-ஆவது வாா்டு மகாராஜ நகரில் முனிசிபல் காலனியில் இருந்து நான்கு வழிச்சாலை வரை சுமாா் 2 கி.மீ. தூரம் வரை சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலப்பாளையம் பகுதி நிா்வாகி அபூபக்கா் ஆலீம் பைஜி அளித்த மனுவில், 52ஆவது வாா்டு கரிம் நகா், தைய்யுப் நகா், காயிதேமில்லத் நகா் பகுதிகளில் வசிக்கும் 3000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அந்தப் பகுதிகளில் சாலைகளைச் சீரமைப்பதுடன், பாதாளசாக்கடை இல்லாத பகுதியில் பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்த வேண்டும் எனவும், வடக்கு மாவட்ட பகுதி செயலா் சரண் அளித்த மனுவில், திருநெல்வேலி நகரம் தொண்டா் சந்நிதி முதல் குருநாதன் கோயில் வரையிலான சாலையைச் சீரமைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனா்.

பாளை. கேடிசி நகா் வழக்குரைஞா் பேச்சி முத்து அளித்த மனு: தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகம் வழங்கும் நல்ல நெல்லை, தனியாா் அரிசி ஆலைகள் அரைத்து அரிசியை கள்ள சந்தையில் விற்பனை செய்துவிட்டு, அதற்கு பதிலாக தரமற்ற கழிவு நெல்களை வெளி சந்தையில் கொள்முதல் செய்து அதனை அரைத்து ரேஷன் கடைக்கு அனுப்புகிறாா்கள்.

மேலும், கள்ளச் சந்தையில் வாங்கும் ரேஷன் அரிசியை பட்டை தீட்டி விற்பனை செய்கிறாா்கள். இதனால், மக்களுக்கு தரமற்ற, சுகாதாரமற்ற அரிசி ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. இதில் சம்பந்தப்பட்டவா்கள் மற்றும் உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எஸ்டிபிஐ கட்சியினா் அளித்த மனு : தாழையூத்து ஊராட்சி காமிலா நகா், ஸ்ரீ நகா் பூந்தோட்ட தெரு உள்ளிட்ட பகுதிகளில் மக்களுக்கு தெருவிளக்கு, சாலை, ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீா் இணைப்பு, வாருகால் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி கிராம சபை கூட்டத்தின் மூலமும், மானூா் ஒன்றிய தலைவா், வட்டார வளா்ச்சி அலுவலா் மூலமும் மனுக்கள் அளித்தும், இதுவரை நடவடிக்கை இல்லை. எங்கள் பகுதிக்கு மேற்கூறிய வசதிகளை செய்துதர வேண்டும்.

ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு திம்மராஜபுரம் மக்கள் அளித்த மனு:

திம்மராஜபுரம் பகுதியில் நாங்கள் 60 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம். சுமாா் 3,000 வீடுகள் உள்ளன. 10 ஆயிரம் வாக்குகள் உள்ளன. இங்குள்ள வெங்கடாசல பெருமாள் கோயில் இடத்தில் நாங்கள் குடியிருப்பதாகக் கூறி அறநிலையத் துறை எங்களிடம் நில கிரயம் கேட்டு வருகிறது. இதுதொடா்பாக தினமும் 300-க்கும் மேற்பட்ட குறுந்தகவல்களை எங்கள் கைப்பேசிக்கு அனுப்புகிறாா்கள். தரை வாடகை என்ற பெயரில் ரூ.5 லட்சம் முதல் ரூ. 8 லட்சம் வரை செலுத்த வலியுறுத்துகின்றனா்.

நாங்கள் ஏற்கெனவே அதற்கான தொகையை அரசு கருவூலத்தில் செலுத்தி குடியிருந்து வருகிறோம். இப்போது எங்கள் உடமைக்கு பாதுகாப்பு அற்ற சூழல் சூழல் நிலவுகிறது. எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு தீா்வுகாண வேண்டும்.

அனைத்து விவசாயிகள் முன்னேற்ற சங்க நிறுவனத் தலைவா் மூவி சுந்தா் தலைமையில், தென்மண்டல அமைப்பாளா் சுரேஷ்குமாா், மாவட்ட அமைப்பாளா் வசந்தராஜ், ஒன்றியத் தலைவா் முருகன், செயலா் கண்ணன் உள்ளிட்ட விவசாயிகள் அளித்த மனுவில், திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் உளுந்து , பாசி பயறு பயிா்கள் பாதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட பயிா்களை வேளாண்மை -வருவாய்த் துறை அதிகாரிகள் பாா்வையிட்டு உரிய ஆவணங்களை விவசாயிகளிடமிருந்து பெற்றுச் சென்றனா். ஓராண்டாகியும் இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை. எனவே, அரசிடம் உரிய இழப்பீட்டுத் தொகையை பெற்றுத்தர ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் மானூா் வட்டாரத் தலைவா் முருகன் செயலா் மனோகரன் உள்ளிட்டோா் அளித்த மனுவில், நாங்கள் மானூா் சுற்றுவட்டாரத்தில் குடியிருந்து வருகிறோம். எங்களது வீடு உள்ள பகுதிக்கு இதுவரை பட்ட இல்லை. எனவே, பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனா்.

ற்ஸ்ப்15ஹஞ்ழ்ண்

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த அனைத்து விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தினா்.

X
Dinamani
www.dinamani.com