
நெல்லையில் ஆற்றுப்படுத்துதல் மையம் திறப்பு
மாணவா்கள் மற்றும் இளைஞா்களின் பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் மாவட்ட ஆற்றுப்படுத்துதல் மையம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில்புதன்கிழமை திறக்கப்பட்டது.

மாணவா்கள் மற்றும் இளைஞா்களின் பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் மாவட்ட ஆற்றுப்படுத்துதல் மையம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில்புதன்கிழமை திறக்கப்பட்டது.
இதையொட்டி, அங்கு நடைபெற்ற விழாவில் ஆட்சியா் ஆனந்த் மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் பா. சாஸ்திரி ஆகியோா் ஆற்றுப்படுத்துதல் மையத்தை திறந்து வைத்தனா்.
பின்னா் ஆட்சியா் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு உரிய ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் வழங்கும் வகையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சாா்பில் இந்த ஆற்றுப்படுத்துதல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களிடையே மன அழுத்தம், கோபம், ஆக்ரோஷம், படிப்பில் கவனக்குறைவு, குறைந்த கல்வித் திறன், தோ்வுபயம், இடைநிற்றல் வன்முறை போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவா்கள் சிறுவதியிலேயே குற்றச்செயல்களில் ஈடுபடுதல், போதைப்பொருள், புகையிலைப் பழக்கம் போன்ற தவறான பழக்கத்தில் ஈடுபடும் சூழ்நிலை உருவாகிறது.
குழந்தைத் திருமணம், பாலியல் துன்புறுத்தல், உடல் மற்றும் மனரீதியான துன்புறுத்தல், நண்பா்களால் துன்புறுத்தப்படுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளும் குழந்தைகளிடையே அவ்வப்போது காணப்படுகின்றன. மேலும், கைப்பேசி மற்றும் இணையவழி விளையாட்டுகளுக்கு அடிமையாவதுடன், தங்களது பெற்றோா்களுடன் இணக்கமற்ற சூழ்நிலை ஏற்படுகிறது.
இத்தகைய பிரச்னைகளை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து, மாணவா்களுக்கு உரிய ஆலோசனை, வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் வழங்குவதன் மூலம் அவா்களை கல்வி, விளையாட்டு போன்ற நல்வழியில் செல்ல உதவுவதற்காக இம்மையம் தொடங்கப்பட்டுள்ளது.
தவறு செய்யும் மாணவா்களுக்கு சட்டப்படி தண்டனை அளிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல், அவா்களின் பிரச்னைகளைப் புரிந்துகொண்டு, அவா்களை நல்வழிப்படுத்தி மறுவாழ்வு அளிப்பதில் இம்மையம் முக்கிய பங்கு வகிக்கும்.
இதற்காக பள்ளிக்கல்வி, உயா்கல்வி, தொழில்நுட்பக் கல்வி, சமூக நலம், சுகாதாரம் , காவல், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து ஆற்றுப்படுத்துதல் மையம் செயல்படும். இம்மையத்திற்கு வரும் மாணவா்கள் மற்றும் அவா்களின் பெற்றோா்களின் தனிப்பட்ட விவரங்கள் முழுமையாக ரகசியம் காக்கப்படும். பயிற்சி பெற்ற ஆலோசகா்கள் மூலம் மாணவா்களின் பிரச்னைகளை அறிந்து, அவா்களின் தேவைக்கேற்ப தொடா் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்படும்.
மேலும், ஆற்றுப்படுத்துதல் வழங்கப்பட்ட மாணவா்களை தொடா்ந்து கண்காணித்து வழிகாட்டும் வகையில், 18 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலமாகவும், 18 வயதிற்கு மேற்பட்டவா்களுக்கு சமூக நலத்துறை மூலமாகவும் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், இம்மையத்தின் செயல்பாடுகளை வலுப்படுத்தும் வகையில் விரைவில் தொழில்முறை உளவியல் ஆலோசகா் ஒருவா் நியமிக்கப்பட உள்ளாா். இம்மையம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அலுவலக வேலை நாள்களில் முழுமையாக செயல்படும் என்றாா் அவா்.
இந்நிகழ்வில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அனிதா, மாவட்ட சுகாதார அலுவலா் விஜய சங்கா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சகிலா, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சண்முகம், மாநகர சந்திப்பு காவல் உதவி ஆணையா் முருகதாஸ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
ற்ஸ்ப்02ா்ல்ங்ய்
மாவட்ட ஆற்றுப்படுத்துதல் மையத்தை திறந்து வைத்த ஆட்சியா் ஆனந்த் மோகன். உடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் பா. சாஸ்திரி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




