தூத்துக்குடியில் குடிசை மாற்று வாரியம் மூலம் ரூ. 29.15 கோடியில் கட்டப்பட்ட 444 குடியிருப்புகளை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தார்.
தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மூலம், தூத்துக்குடி மாநகரில் உள்ள பக்கிள்ஓடை, சாலையோரங்கள் போன்ற ஆட்சேபகரமான பகுதிகளில் அடிப்படை வசதிகளின்றி சுகாதாரமற்ற சூழ்நிலையில் குடிசைப்பகுதிகளில் வாழ்ந்து வரும் 444 குடும்பங்களை மறுகுடியமர்வு செய்ய ராஜீவ் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் மாப்பிள்ளையூரணி- ராஜீவ்காந்திநகர் திட்டப்பகுதியில் 5.12 ஏக்கர் நிலப் பரப்பளவில் ரூ.29.15 கோடி செலவில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன.
குடிசைப்பகுதி மாற்று வாரிய வீடுகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தார்.
குடியிருப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ், முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் பி.டி.ஆர். ராஜகோபால், மேற்பார்வை பொறியாளர் சேதுபதி, செயற்பொறியாளர் எஸ். எட்வின் சாம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தரைத்தளம் மற்றும் இரண்டு அடுக்கு கட்டடத்தில் 444 குடியிருப்புகள் 37 கட்டட தொகுப்புகளாக, ஒரு வீடு தலா 341 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடியிருப்பிலும் பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை, பால்கனி, குளியலறை மற்றும் கழிவறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தார்ச்சாலை, மழைநீர் வடிகால், கழிவுநீர் செல்லும் வசதி, தண்ணீர் சேகரிக்கும் தொட்டி, பூங்கா, அங்கன்வாடி வசதிகள், மழைநீர் சேகரிக்கும் அமைப்பு, குப்பை சேகரிப்பு தொட்டி மற்றும் தெரு விளக்குகள் போன்ற அனைத்து வசதிகளுடன் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ் தெரிவித்தார்.