தூத்துக்குடி மாவட்டத்தில் புதன்கிழமை ரயில் மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 83 பேரை போலீஸார் கைது செய்தனர்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் தூத்துக்குடி மாநகர, ஒன்றிய, ஓட்டப்பிடாரம் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், தூத்துக்குடி இரண்டாம் ரயில்வே கேட் பகுதியில் புதன்கிழமை ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலர் ஞானசேகர் தலைமை வகித்தார். ஓட்டப்பிடாரம் ஒன்றியச் செயலர் அழகு, தூத்துக்குடி ஒன்றியச் செயலர் து. ஞானசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து, பெங்களூரில் இருந்து வந்த மைசூர் விரைவு ரயிலை மறிக்க முயன்றதாக 5 பெண்கள் உள்ளிட்ட 25 பேரை மத்திய பாகம் போலீஸார் கைது செய்தனர்.
போராட்டத்தில், மாதர் சங்க மாவட்டச் செயலர் தனலட்சுமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டப் பொருளாளர் பரமசிவன், அமைப்புசாராத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் பாலாசிங்கம், கலை இலக்கிய பெருமன்ற நிர்வாகி கைலாசமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
கோவில்பட்டியில்... நாகர்கோவிலிலிருந்து கோயம்புத்தூர் நோக்கிச் செல்லும் ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்ற போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் அழகுமுத்துப்பாண்டியன் தலைமையில், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பரமராஜ், சேதுராமலிங்கம், நகரச் செயலர் சரோஜா, ஒன்றியச் செயலர் பாபு மற்றும் 12 பெண்கள் உள்ளிட்ட 47 பேர் அதை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டி.எஸ்.பி. ஜெபராஜ் தலைமையில், ஆய்வாளர்கள் பவுல்ராஜ் (கிழக்கு), ஸ்டெல்லாபாய் (அனைத்து மகளிர் காவல் நிலையம்) மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் மறியலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர்.
திருச்செந்தூரில்... திருச்செந்தூரில் ரயில் மறியல் செய்ய முயன்றதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலர் கரும்பன், ஒன்றியச் செயலர் கல்யாணசுந்தரம், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சங்கரகிருஷ்ணன், ராஜலிங்கம், முத்துலெட்சுமி, இளைஞர் மன்ற ஒன்றிய செயலர் ராமர் உள்ளிட்ட 11 பேரை டி.எஸ்.பி. தீபு, ஆய்வாளர்கள் ரெகுராஜன், ஷீஜாராணி உள்ளிட்ட காவல்துறையினர் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








