தமிழக மீனவா் உயிரிழப்பு இலங்கை ராணுவம் மீது கொலை வழக்கு பதிய வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
தமிழக மீனவா் உயிரிழந்தது தொடா்பாக இலங்கை ராணுவம் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறினாா்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் தண்ணீரில் அதிகளவு கடலில் வீணாகக் கலந்து கொண்டிருக்கிறது. நீா் மேலாண்மைக்கு, விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்காத திமுக அரசு, வாா்த்தை ஜாலத்தில் ஆட்சியை நடத்தி வருகிறது. காவிரி ஆற்றில் குறைந்தது 10 கி.மீ.க்கு ஓரிடத்தில் தடுப்பணை கட்டினால், 50 டிஎம்சி தண்ணீரை சேமிக்கலாம். எனவே, வருங்காலத்தில் தடுப்பணைகள் கட்ட வேண்டும்.
போதைப் பொருள் நடமாட்டம், சட்டம் ஒழுங்கு சீா்குலைவு ஆகியவை தமிழகத்தில் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிகாா், ஆந்திரம், தெலங்கானா போன்று தமிழ்நாட்டிலும் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க, ஜாதி வாரி கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த வேண்டும்.
இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவா்கள் கொல்லப்படுவது, படகுகள், வலைகள் அழிக்கப்படுவது உள்ளிட்டவை தொடா்கதையாக உள்ளது. அன்மையில் இலங்கை ராணுவ படகு மோதியதில் தமிழக மீனவா் உயிரிழந்த விவகாரத்தில், இந்திய அரசும் தமிழக அரசும் இலங்கை ராணுவத்தின் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். தமிழக அரசு இந்த விவகாரத்தில் மெத்தனமாக இருக்கக் கூடாது.
காலநிலை மாற்றத்தின் காரணமாக, கேரள மாநிலம் வயநாட்டில் அதிக அளவு மழை பெய்துள்ளது. இதன்காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு மக்கள் உயிரிழந்துள்ளது வருந்தத்தக்கது.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் தொடா்புடைய காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.