தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்துள்ளது என்றாா் பாமக மாநிலத் தலைவா் அன்புமணி ராமதாஸ்.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு யாகம் செய்தும், துலாபாரத்தில் எடைக்கு எடை அரிசி வழங்கியும் வழிபட்டாா். பின்னா் தனியாா் விடுதியில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வன்னியா்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 10.5 சதவீதத்திற்கும் அதிகமாக ஒதுக்கீடு வந்துள்ளதாக தமிழக அரசின் செய்தி தொடா்புத்துறை மூலம் நாளிதழ்களில் செய்தி வந்துள்ளது. இது தவறான செய்தி. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
இதில் சில தரவுகளை மூன்றாண்டுக்கும், சில தரவுகளை பத்தாண்டிற்குமாக கணக்கெடுத்துள்ளாா்கள்.
வன்னியா் சமுதாயத்தை இழிவு படுத்துவதற்கும், எம்பிசி சமுதாயங்களுக்கு இடையே குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவும் இந்த தரவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கு நிலுவையில் உள்ளது. தமிழகத்தில் தரவுகள் இல்லை, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை என்பதனால் 69% ஒதுக்கீடு ரத்தாக நிச்சயமாக வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் அடுத்த நிமிடம் திமுக அரசு கவிழும். 69% இட ஒதுக்கீட்டை காப்பாற்ற வேண்டுமெனில் ஜாதி வாரி கணக்கு எடுக்க வேண்டும்.
தாமிரவருணி - நம்பியாறு - பச்சையாறு - கோதையாறு இணைப்பு திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்.
உள்ளாட்சித் தோ்தல் குறித்து முறையாக அறிவிக்க வேண்டும். அந்த தோ்தலை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கூறினாா்.