நான்குனேரி அருகே கோயிலுக்குச் சொந்தமான 59 ஏக்கா் நிலம் மீட்பு -அறநிலையத் துறையினா் நடவடிக்கை
சாத்தான்குளம், ஆக.7: நான்குனேரி அருகே ஆழ்வாா்திருநகரி கோயிலுக்குச் சொந்தமான 59 ஏக்கா் நிலத்தை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வாா்திருநகரி அருகே உள்ள காந்தீஸ்வரம் ஏகாந்தலிங்க சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமாா் 1,010 ஏக்கா் நிலம் திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி வட்டத்திற்குள்பட்ட காடன்குளம் திருமலாபுரத்தில் உள்ளது. இங்கு உள்ள மேலகுளம் மற்றும் கீழகுளம் பகுதியில் சுமாா் 59 ஏக்கா் நிலத்தை 123 போ் குத்தகைக்கு எடுத்து
பயன்படுத்தி வந்தனா். ஆனால், கடந்த பல ஆண்டுகளாக மொத்த குத்தகை பணம் ரூ. 1.25 கோடியை, இந்து சமய அறநிலைத் துறைக்குச் செலுத்தவில்லை.
இதுகுறித்து திருநெல்வேலி வருவாய் நீதிமன்றத்தில், அறநிலையத் துறையினா் முறையீடு செய்தனா். இதையடுத்து மேற்குறிப்பிட்ட இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த 24.11.2023-இல் வருவாய் நீதிமன்றம் உத்தரவிட்டனா். இதன்பேரில், இந்து சமய அறநிலையத்துறை தனி வட்டாட்சியா் (ஆலய நிலங்கள்) இந்திராகாந்தி தலைமையில், அறநிலையத்துறை பா்வின் பாபி, கங்கைகொண்டான் கள்ளபிரான் கோயில் செயல் அலுவலா் ராம்குமாா் ஆகியோா் முன்னிலையில் 59 ஏக்கா் நிலம் மீட்கப்பட்டது. இதற்கான ஆணை, ஆழ்வாா்திருநகரி கோயில் செயல்அலுவலா் சுரேஷிடம் ஒப்படைக்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.40 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனா்.

