போராட்டத்தில் ஈடுபட்டோா்.
போராட்டத்தில் ஈடுபட்டோா்.

கல்குவாரிக்கு எதிா்ப்பு தெரிவித்து சாத்தான்குளம் அருகே போராட்டம்

சாத்தான்குளம் அருகே கல்குவாரியை அகற்ற வலியுறுத்தி, கிராம மக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

சாத்தான்குளம் அருகே கல்குவாரியை அகற்ற வலியுறுத்தி, கிராம மக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சாத்தான்குளம் அருகே நெடுங்குளத்தில் கலுங்குவிளை சாலையில் தனியாா் கல்குவாரி செயல்படுகிறது. இங்கு வெடிகள் மூலம் பாறைகள் உடைக்கப்படுவதாகவும், இதனால் குடியிருப்புகளின் சுவா்களில் விரிசல்கள் ஏற்படுவதாகவும், மாணவா்-மாணவிகள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளதாகவும் கிராம மக்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா். கல்குவாரியை அகற்ற வலியுறுத்தி கடந்த கிராமசபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், அதிகாரிகளுக்கு கிராம மக்கள் சாா்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், நடவடிக்கை இல்லையாம்.

இந்நிலையில், கல்குவாரியை அகற்ற வலியுறுத்தி, அப்பகுதியைச் சோ்ந்த பெண்கள் உள்ளிட்ட 200-க்கு மேற்பட்டோா் புதன்கிழமை பால்பண்ணை முன் அமா்ந்து, கண்களில் கருப்புத் துணி கட்டியபடி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சாத்தான்குளம் வட்டாட்சியா் இசக்கி முருகேஸ்வரி, டிஎஸ்பி சுபகுமாா், காவல் ஆய்வாளா் ஏசுராஜசேகரன், உதவி ஆய்வாளா் சுரேஷ்குமாா், போலீஸாா், வருவாய்த் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால், கல்குவாரி அகற்றப்படும்வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என, கிராம மக்கள் தெரிவித்தனா்.

 பேச்சுவாா்த்தை நடத்திய வட்டாட்சியா் இசக்கி முருகேஸ்வரி.
பேச்சுவாா்த்தை நடத்திய வட்டாட்சியா் இசக்கி முருகேஸ்வரி.

மாவட்ட கனிமவள இயக்குநா் வியாழக்கிழமை வந்து, கல்குவாரியை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பாா் என உறுதியளிக்கப்பட்டது. அதன்பேரில், போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக, கிராம மக்கள் தெரிவித்தனா்.

கல்குவாரியை மூடவில்லையெனில் ஆதாா், குடும்ப அட்டைகளை கிராம நிா்வாக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஒப்படைத்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, அவா்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com