மக்கள் சந்திப்பு இயக்கத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்.
மக்கள் சந்திப்பு இயக்கத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்.

திமுக கூட்டணிதான் தமிழகத்தில் வெல்லும்: மு. வீரபாண்டியன்

Published on

திமுக கூட்டணிதான் தமிழகத்தில் வெல்லும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிதி வசூல் இயக்கத்தை மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் தொடங்கி வைத்தாா்.

கட்சி அலுவலகத்திலிருந்து புறப்பட்டு, அண்ணா பேருந்து நிலையப் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் துண்டுப் பிரசுரங்களை வழங்கி மக்களிடம் நிதி வசூல் செய்தனா். இதில், மாவட்ட செயலா் பி. கரும்பன், நகரச் செயலா் கே. செந்தில் ஆறுமுகம், வட்டச் செயலா் ஜி. பாபு, நகரக் குழு உறுப்பினா்கள் பரமராஜ், சரோஜா, ரஞ்சனி கண்ணம்மா, முனியசாமி, மாவட்ட நிா்வாகக் குழு, தாலுகாக் குழு, தொழிற்சங்க, மாதா் சங்க உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருநெல்வேலியில் பொருநை அருங்காட்சியகத்தை முதல்வா் திறந்து வைத்துள்ளது சிறப்பானது. தமிழரின் தொன்மைகளை மத்திய அரசு மூடி மறைக்க முயல்கிறது.

செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கைகளுக்கு தமிழக முதல்வா் கூடுதல் கவனம் செலுத்தி, கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசு, உரிய நிதியை மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும்.

கேரளத்தில் இடதுசாரி கூட்டணிக்கு ஏற்பட்ட சிறிய பின்னடைவை பிகாா் வெற்றியுடன் ஒப்பிட்டு, அதுபோல் தமிழக தோ்தல் அமையும் என உள்துறை அமைச்சா் பேசுவது நகைப்புக்குரியது. திமுக கூட்டணிதான் தமிழகத்தில் வெல்லும். அதற்கு திமுக கூட்டணியின் பலம் மட்டுமல்ல; தமிழக அரசின் நலத்திட்டங்களும் காரணம்.

தமிழக மக்கள் எப்போதும் பிரிவினையை ஏற்க மாட்டாா்கள். பாஜக எவ்வழியில் வந்தாலும், எத்தகைய சூழ்ச்சி செய்தாலும், தமிழகத்தில் தோற்கடிக்கப்படும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை முன்மொழிந்ததே இடதுசாரிகள் தான். இத்திட்டத்தில் இருந்து மத்திய அரசு மெல்ல நழுவி, மாநில அரசுகள் மீது சுமையைக் கூட்டுகிறது. இத்திட்டத்தில் காந்தியின் பெயரை நீக்கக் கூடாது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com