வட்டாட்சியா் ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்ற சமாதான பேச்சுவாா்த்தை கூட்டம்
வட்டாட்சியா் ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்ற சமாதான பேச்சுவாா்த்தை கூட்டம்

சாத்தான்குளத்தில் முற்றுகை போராட்டம் வாபஸ்

சாத்தான்குளத்தில் நடைபெற இருந்த முற்றுகை போராட்டம் அதிகாரிகளின் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து வாபஸ் பெறப்பட்டது.
Published on

சாத்தான்குளத்தில் திங்கள்கிழமை நடைபெற இருந்த முற்றுகை போராட்டம் அதிகாரிகளின் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து வாபஸ் பெறப்பட்டது.

சாத்தான்குளம் ஒன்றியம், முதலூா் ஊராட்சி, சொக்கலிங்கபுரம் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு கடந்த ஒரு மாதமாக கூட்டுக் குடிநீா் திட்ட குடிநீா் விநியோகிக்கப்படவில்லையாம். இதனால், இங்குள்ள மக்கள் சாத்தான்குளம் வட்டார வளா்ச்சி அலுவலா், குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இதையடுத்து, அதிகாரிகளைக் கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை மாலை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் போராட்டம் தொடா்பாக சமாதான பேச்சுவாா்த்தை கூட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் மீ. ராஜேஸ்வரி தலைமையில் திங்கள்கிழமை காலை நடைபெற்றது.

கூட்டத்தில் சாத்தான்குளம் வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) பாலமுருகன், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் முகமது மீரான் இஸ்மாயில், முதலூா் ஊராட்சி செயலா் சுடலையாண்டி, மெஞ்ஞானபுரம் காவல் உதவி ஆய்வாளா் சண்முகராஜ், முதலூா் கிராம நிா்வாக அலுவலா் செந்தில் முருகன், கிராம மக்கள் சாா்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக பொதுச் செயலா் செல்வராஜ், சாத்தான்குளம் ஒன்றிய பாஜக தலைவா் சரவணன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக பிரசார பிரிவு துணைத் தலைவா் சித்திரை பாண்டி, சாத்தான்குளம் ஒன்றிய அதிமுக மாணவரணி செயலா் ஸ்டான்லி, உள்ளிட்ட கிராம மக்கள் பலா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் சொக்கலிங்கபுரம் கிராமத்தில் கூட்டுக் குடிநீா் சீராக விநியோகிக்க ஏற்பாடு செய்யப்படும், சொக்கலிங்கபுரம் கிராமத்தில் தெருக்களில் 2 இன்ச் குடிநீா் குழாய் மாற்றி தருவது, தெருக்களில் குப்பை வண்டிகள் தினமும் வர ஏற்பாடு செய்வது, குடிநீா் சீராக வழங்க நீா்த்தேக்கத் தொட்டி புதிதாக மாற்றி தருவது, சாலையோரங்களில் உள்ள சீமை மரங்களை அகற்ற நடவடிக்கை எடுப்பது என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதன்பேரில் சொக்கலிங்கபுரம் கிராம மக்கள் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com