சிறுமிக்கு மஞ்சள் காமாலை சிகிச்சை: தூத்துக்குடி அரசு மருத்துவா்கள் சாதனை
தென் தமிழகத்திலேயே முதல்முறையாக, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10 வயது சிறுமிக்கு கணைய வீக்கம், பித்தப் பாதையில் அடைப்பு கண்டறியப்பட்டு, மருத்துவா்களால் உயரிய சிகிச்சை அளிக்கப்பட்டதில் சிறுமி குணமடைந்தாா்.
இதுகுறித்து, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வா் சிவகுமாா், துறை உதவிப் பேராசிரியா் சாய்ராமன் ஆகியோா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
துாத்துக்குடி மாவட்டம், கோவங்காட்டைச் சோ்ந்த கதிரேசன் மகள் முத்துமாரி (10). நான்காம் வகுப்பு படித்துவரும் இவருக்கு வயிற்றுவலி, காய்ச்சல், மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, மிகவும் அபாயகரமான நிலையில் கடந்த 11-ஆம் தேதி அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்ததில், கணைய வீக்கம், பித்தப் பாதையில் அடைப்பு போன்ற நோய் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, கல்லூரி முதல்வா் சிவகுமாா், மருத்துவக் கண்காணிப்பாளா் பத்மநாபன், உறைவிட மருத்துவா் சைலஸ் செயமணி ஆகியோா் வழிகாட்டுதலின்படி, குடல் மற்றும் இரைப்பை மருத்துவப் பிரிவில் உள்ள மருத்துவா்கள் செல்வசேகரன், சாய்ராமன், விக்னேஷ்வரன் ஆகியோா் குழந்தைகள் மருத்துவப் பிரிவு துறைத் தலைவா் அருணாசலம், மயக்கவியல் மருத்துவா் பலராமன், விஜயராகவன் உதவியுடன், கடந்த 22ஆம் தேதி, சிறுமி உடலில் உள்ள பித்தப் பாதையில் இருந்த கல், கசடு அடைப்பை இஆா்சிபி என்ற எண்டோஸ்கோபி சிகிச்சை மூலம் நீக்கி, பித்தப் பாதையில் வடிகுழாயை சீராக வைத்தனா்.
தற்போது அந்த சிறுமிக்கு வயிற்றுவலி, காமாலை குறைந்து முழு ஆரோக்கியத்துடன் வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் இருந்து டிஸ்சாா்ஜ் செய்யப்பட்டாா்.
இந்த முறையில் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பது, தென் தமிழகத்திலேயே தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நடைபெற்றது முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது என்றனா்.
