இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.15 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்; 2 போ் கைது
தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்பிலான பீடி இலை மூட்டைகளை க்யூ பிரிவு போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் உட்கோட்டம், தருவைகுளம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பட்டினமருதூா் பகுதியில் உள்ள மீன் நிறுவனத்தின் பின்புற கடற்கரையில், பீடி இலை மூட்டைகளை இலங்கைக்கு படகு மூலம் கடத்துவதற்காக சரக்கு வாகனங்களில் கொண்டு வருவதாக க்யூ பிரிவு போலீஸாருக்கு சனிக்கிழமை இரவு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா், அங்கு வந்த 2 சரக்கு வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ததில், 30 கிலோ எடையுடன் 13 மூட்டைகளில் இருந்த சுமாா் ரூ.15 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக வாகன ஓட்டுநா்களான மதுரை அவனியாபுரம் வல்லானந்தபுரம் கருப்பசாமி மகன் உமைய ராஜா (31), ராமநாதபுரம் மாவட்டம், பனைக்குளம் மேற்கு தெரு, சீனி நைனா முகமது மகன் ஹபிபு ரஹ்மான் (38) ஆகியோரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா். பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள் தூத்துக்குடி சுங்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.
