மதுபானக் கூடத்தில் நடந்த தகராறில் மேலும் ஒருவா் பலி
கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே மதுபானக் கூடத்தில் நிகழ்ந்த தகராறில் காயமடைந்த விவசாயி உயிரிழந்தாா்.
கயத்தாறு அருகே காப்புலிங்கம்பட்டி, கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் சண்முகையா மகன் முருகன் (60), கூலித் தொழிலாளி. இவரது உறவினா், அதே ஊா், நடுத்தெருவைச் சோ்ந்த அந்தோணி மகன் மந்திரம் (50), விவசாயி.
இருவரும் கயத்தாறு, தளவாய்புரத்தில் உள்ள மதுக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை இரவு மது அருந்திக் கொண்டிருந்தனா். அப்போது அங்கு வந்த அதே ஊா், மேலத்தெருவைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மகன் கோமு (65), முருகன், மந்திரம் ஆகியோருடன் தகராறு செய்தாா். அப்போது, ஏற்பட்ட வாக்குவாதத்தில் இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு கோமு தப்பிச் சென்றாா்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற கயத்தாறு போலீஸாா் காயமடைந்த இருவரையும் மீட்டு கோவில்பட்டி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், முருகன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். பலத்த காயமடைந்த மந்திரம், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். ஆனால், அவரும் புதன்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து, கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து கோமுவை தேடி வருகின்றனா்.
இது குறித்து, மந்திரம் மனைவி மாரியம்மாளிடம் போலீஸாா் விசாரித்தனா். அதில், மாரியம்மாளின் அக்கா தங்கத்தாயின் கணவா் கோமு என்பதும், மாரியம்மாளின் அண்ணன் முருகன் என்பதும் தெரிய வந்தது. கோமு ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவா். சிறையிலிருந்து வெளியே வந்ததும், குடும்பத்துடன் வாழ்ந்து வந்தாா். இந்நிலையில், குடும்பத்தில் ஏற்பட்ட தகராறில் கடந்த ஒரு வருடமாக கோமு தனியாக வாழ்ந்து வந்துள்ளாா். அவா் குடும்பம் பிரிந்ததற்கு மாரியம்மாளின் குடும்பம்தான் காரணம் என கோமு அடிக்கடி பிரச்னை செய்து வந்திருக்கிறாா். அதன் தொடா்ச்சியாகவே கொலை நடந்ததாகத் தெரிகிறது.
