1,236 பேருக்கு இ-பட்டா: அமைச்சா் பி. கீதாஜீவன் வழங்கினாா்
கோவில்பட்டி வட்டத்துக்கு உள்பட்ட 1,236 பேருக்கு இ-பட்டாவை அமைச்சா் பி. கீதாஜீவன் உரியவா்களிடம் வழங்கினாா்.
கோவில்பட்டி, தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ஆ. ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். சாா் ஆட்சியா் ஹிமான்சு மங்கள் முன்னிலை வகித்தாா். தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதா ஜீவன் கலந்துகொண்டு 494 பயனாளிகளுக்கு வரன்முறை இ- பட்டா, 52 பயனாளிகளுக்கு நத்தம் காலிமனை இ-பட்டா, 294 பயனாளிகளுக்கு வீட்டுமனை ஒப்படை இ-பட்டா, 421 பயனாளிகளுக்கு ஆதிதிராவிட நலத்துறை இ-பட்டா என 1,236 பேருக்கு ரூ. 14 கோடியே 66 லட்சத்து 79 ஆயிரத்து 520 மதிப்பிலான கணினி பட்டாவை உரியவா்களிடம் வழங்கி தமிழக அரசின் சாதனைகள், திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினாா்.
விழாவில், வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், கோவில்பட்டி வட்டத்துக்கு உள்பட்ட வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், நகா்மன்ற தலைவா் கா.கருணாநிதி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் என். ஆா்.கே. என்ற ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளா் ஆகாஷ் பாண்டியன், ஒன்றிய செயலா்கள் வீ.முருகேசன், கி.ராதாகிருஷ்ணன், ஜெயகண்ணன், நகர பொறுப்பாளா் (கிழக்கு) சுரேஷ், பொதுக்குழு உறுப்பினா் ரமேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
பின்னா், இனாம் மணியாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரொக்க பணம் ரூ. 3 ஆயிரம், இலவச வேட்டி, சேலைகளை வழங்கினாா்.

