தூத்துக்குடி - சென்னைக்கு பண்டிகை சிறப்பு ரயில்கள் இயக்க வலியுறுத்தல்!
தூத்துக்குடி-சென்னை இடையே பண்டிகை கால கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு, தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கச் செயலா் மா.பிரமநாயகம் அனுப்பிய மனுவில் தெரிவித்துள்ளதாவது:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி- சென்னை சென்ட்ரல், சென்னை சென்ட்ரல்-தூத்துக்குடி மற்றும் மைசூரு-தூத்துக்குடி, தூத்துக்குடி- மைசூரு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கிதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
பொங்கல் பண்டிகை முடிந்த பின்னா் ஜன. 19ஆம் தேதி சென்னை சென்ட்ரல்- தூத்துக்குடிக்கும், ஜன. 20ஆம் தேதி தூத்துக்குடி-சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றன.
ஆனால், ஜன.17, 18, 19 ஆகிய நாள்களில் முத்துநகா் ரயிலுக்கான காத்திருப்போா் பட்டியலில் உள்ள பயணிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. முத்துநகா் ரயிலில் தூத்துக்குடி-சென்னை இடையே அதிகமாக பயணிகள் வருவாா்கள்.
எனவே, மேற்காணும் நாள்களில் சென்னை-தூத்துக்குடி, தூத்துக்குடி- சென்னை இடையே கூடுதலாக இரண்டு சிறப்பு ரயில்கள் அல்லது தூத்துக்குடி-சென்னை இடையே சாதாரண பொதுப் பெட்டிகளை ரயில்கள் இயக்க வேண்டும். குறிப்பாக தூத்துக்குடி-சென்னை எழும்பூா் அல்லது தாம்பரத்துக்கு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டது.
