பயிா் காப்பீடு வழங்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்
கோவில்பட்டி கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி பயிா் காப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவில்பட்டி சாா் ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு, கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவா் வரதராஜன் தலைமை வகித்தாா். கயத்தாறு ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத் தலைவா் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தாா். இதில், புதூா் மேற்கு ஒன்றிய அதிமுக செயலா் தனபதி, கரிசல் பூமி விவசாயிகள் சங்க மாவட்ட விவசாய அணி செயலா் நவநீதன் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
பின்னா் அவா்கள் கோவில்பட்டி சாா் ஆட்சியா் ஹிமான்ஷுமங்களிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: கோவில்பட்டி கோட்டத்துக்கு உட்பட்ட எட்டயபுரம், முத்துலாபுரம், இளையரசனேந்தல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 2024-ஆம் ஆண்டு புரட்டாசி ராபி பருவத்தில் உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம், பருத்தி போன்ற பல்வேறு பயிா்களை விவசாயிகள் பயிரிட்டனா்.
ஆனால் 2024 டிச. 14, 16 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால், உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பல்வேறு பயிா்கள் கடுமையாக சேதமடைந்தன. தங்களுக்கு பயிா் காப்பீடு வழங்கக் கோரியும், வெள்ள நிவாரணம் வழங்கக் கோரியும் விவசாயிகள் கடந்த ஓராண்டு காலமாக தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். கடந்த வாரம் மக்காச்சோளம் பயிருக்கு அரசு, பயிா் காப்பீட்டுத் தொகையை விடுவித்தது. இதில், கோவில்பட்டி கோட்டத்தில், கோவில்பட்டி எட்டயபுரம் புதூா் விளாத்திகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு பயிா் காப்பீடு தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் சில கிராமங்கள் விடுபட்டுள்ளன.
அதுமட்டுமின்றி உளுந்து, பாசி, வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி ஆகிய பயிா்கள் 2024-ஆம் ஆண்டு பெய்த கனமழைக்கு சேதமடைந்தது. இந்த பயிா்களுக்கு தற்போது வரை விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு தொகை விடுவிக்கப்படவில்லை என மனுவில் கூறப்பட்டுள்ளது.

