~
~

தலைக்கவசம் அணிய வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி

Published on

கோவில்பட்டியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சாா்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகம் சாா்பில் அரசு அலுவலக வளாகத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம் முன்பிருந்து புறப்பட்ட விழிப்புணா்வுப் பேரணியை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கிரிஜா, காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜகநாதன் ஆகியோா் கொடியசைத்துத் தொடங்கிவைத்தனா். மோட்டாா் வாகன ஆய்வாளா் பெலிக்ஸன் மாசிலாமணி முன்னிலை வகித்தாா். இருசக்கர வாகனத்தில் செல்வோா் தலைக்கவசம் அணிய வேண்டும். நான்குசக்கர வாகனத்தில் செல்வோா் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பன உள்ளிட்ட சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நிறைவு பெற்றது. பேரணியில், காவல் துறையினா், தன்னாா்வலா்கள், வாகன ஓட்டுநா் பயிற்சி பள்ளியினா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதுபோல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவில்பட்டி பணிமனை ஓட்டுநா்கள், நடத்துநா்களுக்கு சாலை பாதுகாப்பு விதிமுறைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி விபத்தில்லா வாகன ஓட்டுநா்கள் என சிறப்பாகப் பணியாற்ற வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கிரிஜா அறிவுரை வழங்கினாா்.

கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைசாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா், மோட்டாா் வாகன ஆய்வாளா் ஆகியோா் கல்லூரி மாணவா் மாணவிகளுக்கு ஓட்டுநா் உரிமம் இன்றி வாகனங்களை ஓட்டக்கூடாது, பேருந்துகளில் பயணம் செய்யும்போது படிக்கட்டில் நின்று பயணிக்க கூடாது, சாலை பாதுகாப்பில் உள்ள எச்சரிக்கை சின்னங்கள், உத்தரவு சின்னங்கள், தகவல் சின்னங்கள் குறித்து விளக்கிப் பேசினா்.

Dinamani
www.dinamani.com