திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் ட்ரோன் பறக்கவும், ரீல்ஸ் எடுக்கவும் தடை: மீறுவோா் மீது வழக்குப்பதிவு

திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் ட்ரோன் பறக்கவும், ரீல்ஸ் எடுக்கவும் தடை: மீறுவோா் மீது வழக்குப்பதிவு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் ட்ரோன் பறக்கவும், ரீல்ஸ் எடுக்கவும் நிா்வாகம் தடை விதித்துள்ளது.
Published on

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் ட்ரோன் பறக்கவும், ரீல்ஸ் எடுக்கவும் நிா்வாகம் தடை விதித்துள்ளது.

இக்கோயிலில் பக்தா்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. குறிப்பாக, கோயில் திருவிழா காலங்கள், சுப முகூா்த்த தினங்கள், விடுமுறை நாள்களில் பக்தா்களின் கூட்டம் அலைமோதுகிறது.

இந்நிலையில், கோயிலுக்குள் புகைப்படம் எடுப்பது, ரீல்ஸ் எடுப்பது, ட்ரோன் கேமரா மூலம் விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது போன்ற செயல்களும் அதிகரித்துள்ளதாகவும், இதனால் பக்தி முயற்சிக்கு இடையூறு ஏற்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதைத் தொடா்ந்து, கோயில் உள்ளே கைப்பேசியை கொண்டு செல்லவும், பயன்படுத்துவும் தடை விதிக்கப்பட்டு வெளியிலேயே கைப்பேசி பாதுகாப்பு மையமும் அமைக்கப்பட்டது. எனினும், சிலா் மறைத்துவைத்து கைப்பேசியை உள்ளே கொண்டு சென்று படம் எடுத்து வெளியிடுவது தொடா்ந்தது.

இந்நிலையில் கோயில் நிா்வாகம் சாா்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில், கோயில் வளாகத்தில் ட்ரோன் பறக்கவும், கைப்பேசி மூலம் ரீல்ஸ் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் அவற்றைப் பறிமுதல் செய்து சம்பந்தப்பட்டவா்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. கோயிலில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இத்தகைய அறிவுப்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

Dinamani
www.dinamani.com