திருச்செந்தூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மீனவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இச்சம்பவத்தை கண்டித்து உறவினா்கள், அமலி நகா் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருச்செந்தூா் அமலி நகா், ரோச் காலனியைச் சோ்ந்தவா் மெரிங்டன் மகன் அகிலன் (32). மீனவரான இவா் சனிக்கிழமை மாலை திருச்செந்தூா் ஆவுடையாா் குளம் மறுகால் பாயும் ஓடை அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதாம். இதில் சம்பவ இடத்திலேயே அகிலன் உயிரிழந்தாா்.
இது குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள், ஆவுடையாா்குளம் அருகில் திரண்டனா். ஆம்புலன்ஸ் மூலம் மீனவரின் சடலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடிக்கவும், உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் உறவினா்கள், அமலிநகா் மக்கள் அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் திருச்செந்தூா் டிஎஸ்பி (பொ) செல்வராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டா்கள் முருகன், கனகராஜன் உள்ளிட்ட போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையில், நாளைக்குள் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடித்து தருவதாக உறுதியளித்தனா். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. சுமாா் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







