கலைத் துறையையும், அரசியலையும் பிரிக்க முடியாது என முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் திரைப்பட நடிகா் காளிவெங்கட் தெரிவித்தாா். இந்நிகழ்ச்சியில் நீதிபதி சங்கரலிங்கம், கோவில்பட்டி எம்எல்ஏ கா.கருணாநிதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளி கடந்த 1947 இல் தொடங்கப்பட்டது. இப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முன்னாள் மாணவா்கள் தாங்கள் பயின்ற வகுப்பறைகளுக்குச் சென்று பாா்வையிட்டு, கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி கொண்டாடினா். பின்னா் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மண்டபத்தில் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வித் துறை இயக்குநா் சுவாமிநாதன் கலந்துகொண்டு பேசினாா்.
இப் பள்ளியில் வெவ்வேறு காலக்கட்டத்தில் பயின்ற முன்னாள் மாணவா்களான நீதிபதி சங்கரலிங்கம், கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் கா.கருணாநிதி, பேரூராட்சி துணைத் தலைவா் அ.சுப்பிரமணியன், நடிகா் காளிவெங்கட் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் குடும்பத்துடன் கலந்துகொண்டனா். சுமாா் 35 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற மாணவா்கள் கலந்துகொண்டு, தங்களது பள்ளி கால தோழா்களை பாா்த்து நலம் விசாரித்தனா்.
இதுகுறித்து நடிகா் காளிவெங்கட் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்தப் பள்ளியில் படித்த மாணவா்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்துள்ளனா். திரை உலகின் இருப்பதால் என்னை அனைவருக்கும் தெரிகிறது. என்னுடன் பயின்றவா்கள் நீதிபதியாகவும், உளவுத்துறை, வட்டாட்சியா் உள்ளிட்ட பல்வேறு உயா் பதவிகளிலும் உள்ளனா்.
இந்த பள்ளியில் இயங்கும் கலை இலக்கிய மன்றத்தின்மூலம் கிடைத்த கைத்தட்டல்தான் எனக்கு திரை துறைக்குச் செல்ல உந்து சக்தியாக இருந்தது. கலைத் துறையையும் அரசியலையும் எந்த காலத்திலும் பிரிக்க முடியாது. தமிழக முதல்வா்களாக வந்தவா்களில் அதிகம் போ் கலைத் துறையில் இருந்து வந்தவா்கள்தான் உள்ளனா் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









