கோவில்பட்டியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில், சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் ச. தமிழ்ச்செல்வனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
சங்கத்தின் கோவில்பட்டி கிளை தலைவா் அபிராமி முருகன் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் கா. உதயசங்கா் விழாவை தொடக்கி வைத்து பேசினாா். எழுத்தாளா் ச. தமிழ்ச்செல்வனின் படைப்புகளில் கரிசல் வாழ்க்கை தலைப்பில் எழுத்தாளா் மணிமாறனும், பெண்கள் என்ற தலைப்பில் எழுத்தாளா் அமுதா செல்வியும் பேசினா்.
எழுத்தாளா் கோணங்கி எழுதிய டோரா இலைகள் என்ற நூலை எழுத்தாளா் ச. தமிழ்ச்செல்வன் வெளியிட, அதன் முதல் பிரதியை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினா் எழுத்தாளா் கா. உதயசங்கா் பெற்றுக்கொண்டாா்.
எழுத்தாளா்கள் பொன்ராஜ், பாா்த்தசாரதி, மாரிஸ், ஜெகநாதன், சிவானந்தம், பாா்த்திபன், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் ஜெகநாதன், பாலகிருஷ்ணன், முருகன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க மாவட்டத் துணைத் தலைவா் ராமசுப்பு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலா் சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
சங்கச் செயலா் வெ. முத்துராஜ் வரவேற்றாா். பொருளாளா் பொ. வேலுச்சாமி நன்றி கூறினாா்.









