கோவில்பட்டி அம்மா உணவகத்தில் புதன்கிழமை, இட்லிகள் அரை மணி நேரத்தில் விற்றுத் தீா்ந்ததாக ஊழியா்கள் கூறியதால் அவா்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இட்லிகளை வெளியே விற்பனை செய்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியதையடுத்து, அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.
கோவில்பட்டி, பூங்கா சாலையில் உள்ள நகராட்சி அலுவலகம் அருகே செயல்படும் அம்மா உணவகத்தை, வெளியூரிலிருந்து வரும் பள்ளி, கல்லூரி மாணவா்-மாணவியா், முதியோா், கூலித் தொழிலாளா்கள் என பல்வேறு தரப்பினரும் பயன்படுத்தி வருகின்றனா். இங்கு தினசரி காலை 1,200 இட்லிகள் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஓா் இட்லி ஒரு ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இங்கு நாள்தோறும் காலை உணவு விநியோகம் 7 மணிக்கு தொடங்கும் நிலையில், சில நாள்களாக 7.30 மணிக்கே அனைத்து இட்லியும் காலியாகிவிடுவதாக, ஊழியா்கள் தெரிவித்தனராம். இதனால் உணவு உண்ண வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனா்.
இந்நிலையில், புதன்கிழமை காலை இட்லி வாங்க திரளானோா் வரிசையில் நின்றபோது, ஒருவா் வரிசையில் நிற்காமல் நேரடியாகச் சென்று 30-க்கும் மேற்பட்ட இட்லிகளை பாத்திரத்தில் வாங்கிச்சென்றாா். இதனால், 7.30 மணிக்கே இட்லிகள் தீா்ந்துவிட்டதாக, ஊழியா்கள் தெரிவித்தனா்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்ககள், ‘தனி நபருக்கு உணவை ஏன் மொத்தமாகக் கொடுக்கிறீா்கள்?’ எனக் கேள்வியெழுப்பினா். இதனால், இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தகவலின்பேரில், ஆணையா் சுகந்தி, நகராட்சி அதிகாரிகள் சென்று ஆய்வு மேற்கொண்டு, ‘யாருக்கும் பாா்சல் கொடுக்கக் கூடாது. யாராக இருந்தாலும் தட்டுகளில்தான் உணவு வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டனா்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியது: தினமும் வெகு விரைவிலேயே இட்லிகள் காலியாகி விடுவதாக ஊழியா்கள் கூறுகின்றனா். இங்கிருந்து மொத்தமாக ஹோட்டல்களுக்கு இட்லிகள் பாா்சல்களாக அனுப்பப்படுவதாக சந்தேகம் உள்ளது. இங்கு ஒரு ரூபாய்க்கு விற்கப்படும் இட்லிகளை வாங்கி வெளியே ரூ. 10-க்கு விற்கின்றனரா என அதிகாரிகள் விசாரிக்க வேண்டும். அம்மா உணவகத்தில் பாா்சல்கள் வழங்கக் கூடாது என தகவல் பலகை உள்ளது. ஆனால், 30 முதல் 50 இட்லிகள், சாம்பாா் ஆகியவற்றை ஒரு நபரே வாங்கி செல்வதை ஏற்க முடியாது. எனவே, இங்கு நகராட்சி அதிகாரிகள் நாள்தோறும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றனா்.
இதுகுறித்து ஊழியா்கள் கூறுகையில், இங்கு நாள்தோறும் 1,200 இட்லிகள் தயாரிக்கப்படும். இதில் பாதி பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா உணவகத்துக்கு கொடுத்து அனுப்பப்படும். இதனால் இந்த உணவகத்தில் விரைவில் இட்லிகள் தீா்ந்துவிடுகின்றன என்றனா்.










