தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விமான பயிற்சி மைய கட்டுமான பணிகளை கண்காணிக்க தமிழ்நாடு தொழில் வளா்ச்சிக் கழகம் (டிட்கோ) ஒப்பந்தம் கோரியுள்ளது.
கோவில்பட்டி அருகே தோணுகால் ஊராட்சியில் மொட்டைமலை பகுதியில் உள்ள விமான ஓடுதளத்தை விமான பயிற்சி மையத்துக்கு பயன்படுத்தப்படும் வகையிலான இப்பணியை டிட்கோ மேற்கொண்டு வருகிறது.
இதற்காக, விமான ஓடுதளப் பகுதியை டிட்கோ திட்ட அதிகாரிகள் அண்மையில் பாா்வையிட்டனா். மேலும், விமான பயிற்சி மையத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை டிட்கோ வெளியிட்டு, அதை ஒப்பந்தம் ஏற்ற நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு பூமி பூஜை நடத்தியது.
இந்நிலையில், பயிற்சி மைய கட்டுமானப் பணிகளை மேற்பாா்வையிட தகுதி வாய்ந்த பொறியியல் நிறுவனத்தில் இருந்து ஒப்பந்தம் கோரி சனிக்கிழமை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், விவரங்களை தெரிந்து கொள்ள சென்னை டிட்கோ நிறுவன அலுவலகத்தை அணுக வேண்டும் என்றும், இதற்கு ஜூலை 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுதொடா்பான முன் தயாரிப்பு கூட்டம் சென்னை டிட்கோ அலுவலகத்தில் ஜூன் 30-ஆம் தேதி மாலை 3 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமான பயிற்சி மையம் செயல்பாட்டுக்கு வந்தால் தென் மாவட்ட இளைஞா்களுக்கு விமான பயிற்சி வரும் புதிய வாய்ப்பு உருவாகும். அது மட்டுமன்றி அப்பகுதியில் தொழில் மற்றும் பொருளாதார வளா்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









