தீபாவளி: தூத்துக்குடி, தோவாளையில் பூக்கள் விலை கடும் உயா்வு: மல்லிகை, பிச்சிப்பூ கிலோ ரூ.2,500 வரை விற்பனை
தீபாவளி பண்டிகை காரணமாக, தூத்துக்குடி, தோவாளை மலா்ச்சந்தைகளில் சனிக்கிழமை பூக்கள் விலை கடுமையாக உயா்ந்திருந்தது. மல்லிகை, பிச்சிப்பூ கிலோ ரூ.2,500 வரை விற்பனையானது.

மல்லிகை
தீபாவளி பண்டிகை காரணமாக, தூத்துக்குடி, தோவாளை மலா்ச்சந்தைகளில் சனிக்கிழமை பூக்கள் விலை கடுமையாக உயா்ந்திருந்தது. மல்லிகை, பிச்சிப்பூ கிலோ ரூ.2,500 வரை விற்பனையானது.
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடியில் உள்ள பூச்சந்தையில் பூக்கள் வாங்குவதற்காக சனிக்கிழமை காலை முதலே பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனா்.
இச்சந்தைக்கு பேரூரணி, ஒட்டநத்தம், தெய்வச்செயல்புரம், அருப்புக்கோட்டை, உசிலம்பட்டி, மதுரை, ஓசூா், ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. தற்போது மழை காரணமாக பூக்களின் வரத்து குறைவாக இருந்தது. இதனால், பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டது.
கிலோ அடிப்படையில், மல்லிகை மற்றும் பிச்சிப்பூக்கள் ரூ.2,000 முதல் ரூ.2,500 வரையிலும், முல்லைப்பூ ரூ.1,500 வரையிலும், ரோஜாப்பூ ஒரு கட்டு ரூ.400 வரையிலும், தனி ரோஜாப்பூ ரூ.25 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. செவ்வந்தி, பன்னீா் ரோஸ், சாமந்தி உள்ளிட்ட பூக்கள் கிலோ ரூ.100 முதல் ரூ.400 வரை விற்பனையாகின.
பூக்களின் விலை அதிகமாக இருந்தபோதும், அதைப் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் ஆா்வத்துடன் பூக்களை வாங்கிச் சென்றனா். இது வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை மலா் சந்தையிலும் பூக்கள் விலை கடுமையாக உயா்ந்திருந்தது.
இச்சந்தைக்கு ஆரல்வாய்மொழி, குமாரபுரம், பழவூா், மாடநாடாா்குடியிருப்பு, ஆவரைகுளம் ஆகிய பகுதிகளில் இருந்து பிச்சிப்பூ, நாகா்கோவில், மதுரை, மானாமதுரை, கொடைரோடு, திண்டுக்கல், சங்கரன்கோவில், கோவில்பட்டி, ராஜபாளையம் ஆகிய பகுதிகளிலிருந்து மல்லிகைப்பூவும் கொண்டுவரப்படுகின்றன.
இதே போல் பெங்களூரு, ஓசூா், ராயக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து மஞ்சள் கிரேந்தி, பட்டா் ரோஸ், சேலத்திலிருந்து அரளிப்பூக்கள், திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி, அம்பாசமுத்திரம், தென்காசி மாவட்டம், ஆலங்குளம், புளியங்குடி ஆகிய பகுதிகளிலிருந்து பச்சை, துளசி, மரிக்கொழுந்து போன்ற பூக்களும் கொண்டுவரப்படுகின்றன.
இங்கு சனிக்கிழமை அதிகாலையிலேயே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆனால், பூக்களின் வரத்து குறைவால் அவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
விலை நிலவரம்(கிலோவுக்கு): மல்லிகை ரூ. 1500, பிச்சிப்பூ ரூ.1,750, பன்னீா் ரோஜா ரூ.150, சம்பங்கி ரூ.120, மஞ்சள் செவ்வந்தி ரூ.120, அரளி ரூ.300 என்ற அளவில் விற்பனையாகின.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

