/

துறையூர் புறவழிச் சாலைத் ​ திட்டம் நிறைவேறுவது எப்போது?

துறையூர், மே 11: திருச்சி மாவட்டம், துறையூரில் புறவழிச் சாலை அமைக்கும் திட்டம் நிறைவேற்றப்படுவது எப்போது என, நாள்தோறும் நெரிசலில் சிக்கித் தவிக்கும் இப் பகுதி மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

News image
Updated On :27 டிசம்பர் 2023, 2:13 pm

என். கணேஷ்சங்கர்

துறையூர், மே 11: திருச்சி மாவட்டம், துறையூரில் புறவழிச் சாலை அமைக்கும் திட்டம் நிறைவேற்றப்படுவது எப்போது என, நாள்தோறும் நெரிசலில் சிக்கித் தவிக்கும் இப் பகுதி மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

உப்பிலியபுரம் தொகுதியில் (தற்போது துறையூர்) தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் துறையூர் நகரப் புறவழிச் சாலை, காவிரி கூட்டுக் குடிநீர் ஆகிய திட்டங்களே பிரதானமாக வலியுறுத்தப்பட்டன.

இந்நிலையில், 1996-ல் திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மட்டும் நிறைவேற்றப்பட்டது. ஆனால், புறவழிச் சாலைத் திட்டம் ஏனோ கிடப்பில் போடப்பட்டது.

இத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, அமைச்சராக இருந்த சரோஜா, தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுகவைச் சேர்ந்த பேரவை உறுப்பினர் இரா. ராணி மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் இப் பகுதியில் நடைபெறும் அரசு விழாக்கள், பொதுக் கூட்டங்களில் பங்கேற்கும் போதெல்லாம், துறையூர் நகர் புறவழிச் சாலை திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டுவிட்டது, நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது; விரைவில் புறவழிச் சாலை அமையப் போகிறது என்று கூறி வந்தனர். ஆனால், திட்டம் நிறைவேற்றப்படுவதற்கான அறிகுறி இதுவரை தெரியவில்லை.

நாள்தோறும் பெருகி வரும் வாகனங்கள், சாலை ஆக்கிரமிப்புகள் காரணமாக பொதுமக்கள் சாலையோரத்தில் நடந்து செல்ல இயலாத அளவுக்கு போக்குவரத்து நெரிசலை சந்தித்து வருகிறது துறையூர்.

இதுகுறித்து இத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா. ராணி கூறியது:

சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இதுகுறித்துப் பேசினேன். அப்போது பதிலளித்த இத் துறை அமைச்சர் அரசு அலுவலகங்களுக்கு இடையேயான தகவல் பரிமாற்றத்தில் ஏற்படும் தாமதம் காரணமாக திட்டம் நிறைவேறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

விரைவில் துறையூர் புறவழிச் சாலைத் திட்டம் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார். எனவே, நிகழாண்டில் புறவழிச் சாலை அமைக்கும் பணி முடிந்துவிடும் என்றார் அவர்.

இதற்கிடையே, புறவழிச் சாலை அமைக்கும் திட்டத்தின் நிலை குறித்து அறிய விரும்பிய துறையூர் ஒன்றிய அதிமுக முன்னாள் செயலர் இரா. மோகன், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் புறவழிச் சாலைப் பணிகள் குறித்து விளக்கம் கேட்டார்.

இதற்கு திருச்சி கோட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரி அளித்த பதில்:

3.6 கி.மீ. தொலைவுக்கு துறையூர் புறவழிச் சாலை அமைக்கும் பணிக்கு 2006-ல் ரூ. 3.84 கோடி ஒதுக்கப்பட்டது. பின்னர், திட்ட மதிப்பீடு திருத்தப்பட்டு, 2008-ல் நிலம் கையகப்படுத்தவும், சாலை அமைக்கவும் ரூ. 8.45 கோடி ஒதுக்கப்பட்டது.

ஆனால், நில உரிமையாளர்கள் அரசு நிர்ணயித்த தொகையை ஏற்க மறுத்து கூடுதல் தொகை கேட்பதால், நிலம் கையகப்படுத்தும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது முடிந்தால் நிகழாண்டிலே புறவழிச் சாலை அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் அந்த அதிகாரி.

துறையூர் புறவழிச் சாலைத் திட்டம் தொடர்ந்து வாக்குறுதியாகவே இருப்பதால், இத் திட்டம் நிறைவேற்றப்படுமா அல்லது கானல் நீராகிவிடுமா என்ற சந்தேகம் மக்கள் மனதில் மேலோங்கியுள்ளது.

எனவே, திமுக அரசு இத் திட்டத்தை நிறைவேற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.