மாணவர்களுக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமா?

அரியலூர், ஜூலை 22: இலவசப் பேருந்து பயண அட்டை பெற்றுள்ள மாணவ, மாணவிகள், அரசுப் பேருந்துகளில் அவதிப்பட்டுச் செல்லும் நிலையை மாற்றும் வகையில், புதுவை மாநிலத்தில் இயக்கப்படுவது போல, மாணவர்களுக்கென தனியாக
Updated on
2 min read

அரியலூர், ஜூலை 22: இலவசப் பேருந்து பயண அட்டை பெற்றுள்ள மாணவ, மாணவிகள், அரசுப் பேருந்துகளில் அவதிப்பட்டுச் செல்லும் நிலையை மாற்றும் வகையில், புதுவை மாநிலத்தில் இயக்கப்படுவது போல, மாணவர்களுக்கென தனியாக சிறப்புப் பேருந்துகளை தமிழகத்திலும் இயக்க வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

    கிராமப்புறங்களிலிருந்து, நகர்ப்புறங்களுக்கு வந்து பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் நலன் காக்க தொடங்கப்பட்ட இலவச பேருந்து பயண அட்டை திட்டம், தற்போது தொழில்நுட்பக் கலலூரி, கலை அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

   ஆனால், இந்த இலவச பேருந்து பயண அட்டை பெற்றுள்ள மாணவ, மாணவிகள், அரசுப் பேருந்துகளில் தங்களது புத்தக மூட்டைகளுடன் தொங்கிக் கொண்டு, அளவுக்கு அதிகமான கூட்டத்தில் பயணம் செய்யும் நிலை பரவலாகக் காணப்படுகிறது.

   சில பேருந்து நடத்துநர்களும், ஓட்டுநர்களும் குறிப்பிட்ட பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தாமல், இலவச பேருந்து பயண அட்டை  வைத்திருக்கும் மாணவ, மாணவிகளை அலைய வைத்து, அதன் பின்னர் ஏற்றிச் செல்வது ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

   நகர்ப் பகுதிகளில் அதிகளவில் பேருந்துகள் இயக்கப்படுவதால், ஒரு பேருந்தைத் தவறவிட்டால், அடுத்த பேருந்தில் நகர்ப் பகுதி மாணவ, மாணவிகள் செல்லும் வாய்ப்பு உள்ளது.

   ஆனால், கிராமப்புறங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இயக்கப்படும் பேருந்துகளைத் தவறவிட்டால், கிராமப்புற மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் பெரும் சிரமத்திற்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது.

   கிராமப்புறங்களில் அரை மணி நேரத்துக்கு ஒரு முறையோ அல்லது ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறையோ பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், காலை நேரத்தில் வரும் பேருந்துகளில் அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள், இதர வேலைகளுக்குச் செல்வோர் அதிக அளவில் ஏறுவதால், மாணவர்கள் பேருந்தில் ஏறுவதற்கு மிகவும் அவதிப்படுகின்றனர்.

   மேலும், கூட்டம் அதிகம் இருந்தால், ஓட்டுநர்கள் பேருந்துகளை நிறுத்தாமலே சென்று விடுகின்றனர். இதனால், இலவச பேருந்து பயண அட்டை வைத்திருக்கும் மாணவ, மாணவிகள் தவிக்கும் நிலை ஏற்படுகிறது.

   இதற்கு மாற்றுத் தீர்வு என்ன: இந்த பிரச்னைக்கு தீர்வு காண, முற்றிலும் மாணவ, மாணவிகள் மட்டுமே செல்லக்கூடிய வகையில்,  சிறப்புப் பேருந்துகள் அல்லது தனிப் பேருந்துகளை அனைத்து மாவட்டங்களிலும் இயக்கலாம்.    

புதுவை மாநிலத்தில் மாணவர்களுக்கென தனிப் பேருந்துகள்  இயக்கப்படுகின்றன. இந்த முறையை தமிழகத்திலும்  செயல்படுத்தலாம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். மேலும், மாவட்டம் வாரியாக பள்ளிகளின் விவரங்கள், இலவச பேருந்து பயண அட்டை பெற்றுள்ள மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை, பேருந்துகளின் எண்ணிக்கை போன்ற விவரங்களைக் கணக்கிட்டு, எந்தெந்த வழித்தடங்களில் மாணவர்களுக்கான தனிப் பேருந்துகளை இயக்கலாம் என்பதை கண்டறிய வேண்டும்.

   பின்னர், அதற்கேற்ற வகையில் உடனடியாக தனிப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் அவர்கள்.

   இவ்வாறு மாணவர்களுக்கான தனிப் பேருந்துகளை இயக்குவதால், வழக்கமான பேருந்துகளில் மாணவ, மாணவிகள் பயணம் செய்வது முற்றிலும் தவிர்க்கப்படுவதுடன், ஓட்டுநர்களும், நடத்துநர்களும் எவ்வித இடையூறுமின்றி பேருந்துகளை விரைவாக  இயக்கிச் செல்லலாம்.

   ஏற்கெனவே, பேருந்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்குவதால் எப்படி தனிப் பேருந்துகளை இயக்க முடியும் என்று வினா எழாமல் இருக்காது.

நகர்ப்புறங்களில் கூடுதலாகவும், வருவாய் அதிகம் தராத பகுதிகளில் பெயரளவிலும் இயக்கப்படும் பேருந்துகளை, இந்தத் திட்டத்துக்காக பயன்படுத்தலாம்.

    இதற்கு வாய்ப்பு இல்லை என்றபட்சத்தில், மாணவ, மாணவிகளின் நலன் காக்க போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு தனியாக நிதி ஒதுக்கீடு செய்து, சிறப்புத் திட்டத்தின் கீழ், புதிய பேருந்துகளை காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமாவது இயக்கலாம்.

 மற்ற நேரங்களில் மற்ற வழித்தடங்களில் அந்தப் பேருந்துகளை இயக்கிக் கொள்ளலாம்.  இதற்கான நடவடிக்கையை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com