அஞ்சல் வாக்குகள்: கோட்டைவிட்ட தேர்தல் ஆணையம்?
திருத்துறைப்பூண்டி, ஏப். 30: தமிழகம் முன்னெப்போதும் கண்டிராத வகையில் அதிக சதவீத வாக்குகள் இந்த சட்டப்பேரவை தேர்தலில் பதிவாகியது. இதற்கு தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளே காரணம் என்று கூறி, ஆணையத்துக்கு


திருத்துறைப்பூண்டி, ஏப். 30: தமிழகம் முன்னெப்போதும் கண்டிராத வகையில் அதிக சதவீத வாக்குகள் இந்த சட்டப்பேரவை தேர்தலில் பதிவாகியது. இதற்கு தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளே காரணம் என்று கூறி, ஆணையத்துக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில், அஞ்சல் வாக்குகள் பதிவில் தேர்தல் ஆணையம் கோட்டை விட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகளும், சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் ஏப். 13ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. ஒரு மாத இடைவெளிக்கு பின்னர் மே 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன. தேர்தல் பணியில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என சுமார் 2 லட்சத்து 88 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டனர். அதாவது, சராசரியாக ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தபட்சமாக 1500 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் படிவம் 12-ஐ நிறைவு செய்து அளித்தால், ஆணையத்தின் சார்பில் குறிப்பிட்ட அரசு ஊழியருக்கு பதிவு அஞ்சலில் அஞ்சல் வாக்குச் சீட்டுகளை வீட்டுக்கே அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த அஞ்சல் வாக்குச் சீட்டுகளை அஞ்சல் நிலையங்கள் மூலமாகவும், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரின் (ஆர்.ஓ) அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் பெட்டிகளிலும் செலுத்த ஆணையத்தின் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஆர்.ஓ. அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் பெட்டிகளில் செலுத்தப்படும் அஞ்சல் வாக்குகளை தினமும் பெட்டியிலிருந்து சேகரிக்கப்படும்போது, அரசியல் கட்சிகளின் முகவர்கள் இல்லாமல் அதிகாரிகளே பெட்டியிலிருந்து வாக்குகளை சேகரித்து அதுகுறித்த விவரங்களை பதிவேடுகளில் பதிவு செய்கிறார்கள். இதில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு இருப்பதாக கட்சியினர் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றனர்.
இதுமட்டுமல்லாது, அரசு ஊழியர்கள் அஞ்சல் மூலம் வாக்குகளை அனுப்பும்போதும், முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏனெனில், அந்த அஞ்சல் உறையின் மேல் "தேர்தல்-அவசரம்' என்பது உள்பட தேர்தல் நடத்தும் அலுவலரின் முகவரி உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பல்வேறு தகவல்கள் இடம்பெற்றிருப்பதால், அது கட்டாயம் அஞ்சல் வாக்குச் சீட்டு என்பது உறுதியாகிறது. அஞ்சல் பெட்டியில் செலுத்தப்படும் இந்த அஞ்சல் வாக்குச் சீட்டை சிலர் இடைமறிக்கவும் வாய்ப்புள்ளது. இடைமறித்து அந்த அஞ்சல் வாக்குகளை எடுத்தாலும், அதுதொடர்பாக எதுவும் தெரியப் போவதில்லை. ஏனெனில் செலுத்தப்பட்ட அஞ்சல் வாக்குகள் தொடர்பாக தபால் துறை ஒப்புதலோ, பதிவேட்டிலோ பதிவு செய்வதோ இல்லையாம்.
அரசு ஊழியர்களுக்கு பதிவு அஞ்சலில் அஞ்சல் வாக்குச் சீட்டுகளை ஆணையம் அனுப்புகிறது. ஆனால், அரசு ஊழியரிடமிருந்து ஆணையத்துக்கு செல்லும்போது சாதாரண அஞ்சலிலேயே அஞ்சல் வாக்குகள் செல்வதால், செலுத்தப்படும் வாக்குச் சீட்டுகள் உரிய முறையில் தேர்தல் அலுவலரை சென்றடைகிறதா என்பதற்கு எந்த ஆதராமும் இல்லை எனக் கூறப்படுகிறது.
மன்னார்குடியில் தேர்தல் ஆணையத்தால் அஞ்சல் துறை மூலம் அரசு ஊழியருக்கு பதிவு அஞ்சலில் அனுப்பப்பட்ட வாக்குச் சீட்டுகளை கொண்டு சென்ற அஞ்சல் துறை ஊழியரை இடைமறித்த குறிப்பிட்ட கட்சியை சேர்ந்த மன்னார்குடி முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஒருவர், குறிப்பிட்ட அரசு அலுவலர்களிடம் அவற்றை தந்துவிடுவதாக கூறி வாங்கி சென்றது தொடர்பான புகாரில் அவர் கைது செய்யப்பட்டதும், அந்த அஞ்சல்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுமே இதற்கு சாட்சி.
ஒருசில மாவட்டங்களில் தேர்தல் அதிகாரிகள் யார் வந்து வாக்கு செலுத்துகிறார்கள் என்று விசாரிப்பதில்லையாம்.
இதுபோல், பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் சிலரின் வாக்குகளை ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் வந்து செலுத்தினார்களாம்.
இவ்வாறு செய்யும்போது, அந்த வாக்குகள் அந்த நிர்வாகிகள் சார்ந்த கட்சிக்காகதான் செலுத்தப்பட்டிருக்கும் என்பதிலும் ஐயமில்லை.
இதுதொடர்பாகவும் தேர்தல் ஆணையம் உரிய விதிகளை அறிவுறுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.
அதாவது, அந்த அரசு ஊழியரே வந்து வாக்குகளை பெட்டியில் செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை.
வாக்குகள் எண்ணுவதற்கு நீண்ட இடைவெளி இருப்பதால், சம்பந்தப்பட்ட அரசு ஊழியரை கட்சி நிர்வாகிகள் சந்தித்து "உரிய' முறையில் மூளைச் சலவை செய்து தங்கள் கட்சிக்காக அவர்களின் வாக்குகளை செலுத்த செய்வதும் மாநிலம் முழுவதும் பல்வேறு தொகுதிகளில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் விடுத்த எச்சரிக்கையையும் மீறி இவ்வாறாக நடைபெறுவதாக நடுநிலையாளர்கள் புகார் கூறுகின்றனர். இதுதொடர்பாக ஆணையம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
கடந்த தேர்தல்களில் ஒருசில தொகுதிகளின் முடிவை அஞ்சல் வாக்குகளே நிர்ணயம் செய்துள்ள நிலையில், இதுபோன்ற பல்வேறு சிக்கல்களினாலும், கட்சி நிர்வாகிகள் எழுப்பும் கேள்விகளாலும் தேர்தல் அலுவலர்கள்தான் திணறுகின்றனர். இதுபோன்ற நடைமுறை சிக்கல்களை களைய ஆணையம் அஞ்சல் வாக்குகள் குறித்து தேர்தல் ஆணையம் உரிய அறிவுறுத்தல்களை மாநிலம் முழுவதும் உள்ள தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி, எந்த முறைகேடுகளுக்கும் வாய்ப்பில்லாது செய்ய வேண்டும்.
தனது சீரிய நடவடிக்கைகள் மூலம் இந்தமுறை வாக்குச் சாவடிகளில் அதிக எண்ணிக்கையில் வந்து வாக்களிக்கும் வகையில் வாக்காளர்களின் ஆர்வத்தை தூண்டிய தேர்தல் ஆணையம் அஞ்சல் வாக்குப்பதிவிலும் அலட்சியம் காட்டாமல் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...