மின் தட்டுப்பாடு: அரசு உதவியை எதிர்பார்க்கும் சிறு தொழில் நிறுவனங்கள்

கரூர், மார்ச் 9: மின் தட்டுப்பாட்டைச் சமாளிப்பதற்காக ஜெனரேட்டர் வாங்க விரும்பும் தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் அரசிடமிருந்து கூடுதல் மானியத்தை எதிர்பார்த்துள்ளனர். கடந்த திமுக ஆட்சியில் தொடங்கிய
Updated on
2 min read

கரூர், மார்ச் 9: மின் தட்டுப்பாட்டைச் சமாளிப்பதற்காக ஜெனரேட்டர் வாங்க விரும்பும் தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் அரசிடமிருந்து கூடுதல் மானியத்தை எதிர்பார்த்துள்ளனர்.

கடந்த திமுக ஆட்சியில் தொடங்கிய மின் தடை, அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் இரண்டு மணி நேரமாகக் குறைந்தது.

தற்போது 7 முதல் 9 மணி நேரம் வரை மின் வெட்டு செய்யப்படுகிறது. மேலும், தொழில் நிறுவனங்களுக்கு வாரத்தில் ஒரு நாள் மின் விடுமுறையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் ஜவுளி சார்ந்த தொழில் நிறுவனங்கள், கொசுவலை தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் பேருந்து கூண்டு கட்டும் தொழில் நிறுனங்கள் பெருமளவில் உள்ளன. இந்த மின் தடையால் தொழில் முடங்காமல் பாதுகாக்கவும், தொழிலாளர்கள் மாற்று வேலைக்குச் செல்லாமல் தடுத்திடவும் தொழில் நிறுவனங்கள் தங்களது தேவைக்கேற்ப ஜெனரேட்டர் வாங்கி பயன்படுத்தும் கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.

மாவட்டத் தொழில் மையம் மூலம் ஜெனரேட்டருக்கு அதிகபட்சமாக ரூ.1. 50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. 125 கே.வி. திறன் கொண்ட ஜெனரேட்டர்கள் ரூ. 6 லட்சம் வரை விற்கப்படுகிறது. இந்நிலையில், பெரும்பாலான நிறுவனங்கள் அவர்களின் தேவைக்கு ஏற்ப 15 முதல் 20 கே.வி. வரையிலான ஜெனரேட்டர்களை வாங்கிப் பயன்படுத்தி வருகின்றன.

இதுகுறித்து ஜவுளி ஏற்றுமதி நிறவன உரிமையாளர் ஒருவர் கூறியது: இப்போது அதிகபட்சமாக பகலில் 6 மணி நேரம் மின் வெட்டு செய்யப்படுகிறது. இதனால் தொழிலாளர்களின் பணி முடங்குவதோடு, குறித்த நேரத்தில் உற்பத்தியை முடிக்க இயலவில்லை. மேலும், சனிக்கிழமை தொழில் நிறுவனங்களுக்கு மின் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 நாள்களாக மின் வெட்டு பகலில் 4 மணி நேரமாகக் குறைந்துள்ளது. இந்த நிலை எத்தனை நாள்கள் நீடிக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது.

மின்சாரம் தடைபட்டு மீண்டும் வரும் போது இயந்திரங்கள் உற்பத்தி நிலைக்கு வர 30 நிமிஷங்களுக்கு மேலாகிறது. மாவட்டத் தொழில் மையம் மூலம் மானியத்தில் ஜெனரேட்டர் வாங்க முயன்றால், அரசு ஒதுக்கிய மானியத்தொகை முழுவதுமாகப் பயன்படுத்திவிட்டதாகவும், புதிதாக நிதி வந்தால் மட்டுமே மானியம் தர முடியும் என்றும் கூறுகின்றனர்.

கரூர் மாவட்டத்தைப் பொருத்தவரை விவசாயத்துக்கு அடுத்து ஜவுளித் தொழில்தான் பிரதானமாக உள்ளது. மின்சாரம் இருந்தால் மட்டுமே செயல்படும் சிறு ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள், மின் தட்டுப்பாடு காரணமாக தொழிலைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

இந்தத் தொழில் நிறுவனங்கள் ஜெனரேட்டரை பயன்படுத்தி தொழில் நடத்தும் வகையில், தற்போது வழங்கப்பட்டு வரும் 20 சத மானியத்தை 50 சதமாக உயர்த்துவதோடு, விண்ணப்பம் அளிக்கும் அனைத்து சிறு ஜவுளி உற்பத்தி நிறுவனங்களுக்கும் மானியம் அளிக்கவும் அரசு முன்வர வேண்டும் என்றார் அவர்.

இதுகுறித்து மாவட்ட தொழில் மைய உயரதிகாரி கூறியது: நிறுவனச் செயல்பாடு, மின் பயன்பாட்டை ஆய்வு செய்து, அவர்களுக்குத் தேவையான ஜெனரேட்டர் வாங்க அதிகபட்சம் ரூ 1.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் மட்டுமே நிதி வழங்கப்படுகிறது. நிகழாண்டில் ரூ.9.13 லட்சம் ஒதுக்கீடு பெறப்பட்டு, அந்தத் தொகை முழுவதுமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. 10 நிறுவனங்களுக்கு ஜெனரேட்டர் வாங்க மானியம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 10-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. கடந்த 6 மாதங்களாக ஜெனரேட்டர் மானியம் பெற விண்ணப்பம் அளிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றார் அவர்.

மின் தட்டுப்பாட்டால் சிறு தொழில் நிறுவனங்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. மாவட்டத் தொழில் மையத்தின் மூலம் அரசின் மானிய விலையில் சிறு தொழில் நிறுவனங்கள் ஜெனரேட்டர் வாங்க கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் அந்த நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com