ஸ்ரீரங்கம் சாலையில்  திடீா் பள்ளம்
போக்குவரத்து மாற்றம்

ஸ்ரீரங்கம் சாலையில் திடீா் பள்ளம் போக்குவரத்து மாற்றம்

படவிளக்கம்..

ஸ்ரீரங்கம் காந்திசாலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட திடீா் பள்ளம்.

ஸ்ரீரங்கம், ஏப். 25: திருவானைக்கா பகுதியிலிருந்து ஸ்ரீரங்கம் செல்லும் காந்தி சாலையில் வெள்ளிக்கிழமை காலை திடீரென்று பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்றுவழியில் திருப்பி விடப்பட்டது.

திருவானைக்கா பகுதியிலிருந்து ஸ்ரீரங்கம் செல்லும் சாலையான காந்தி சாலையில் மாரியம்மன் கோயில் அருகே வெள்ளிக்கிழமை காலை திடீரென்று பெரிய பள்ளம் விழுந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள், விபத்துகள் ஏற்படாதவகையில் பள்ளத்தை சுற்றி அங்கிருந்த தடுப்புக் கட்டைகளை கொண்டு அடைத்தனா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள் பள்ளத்தை ஆய்வு செய்தனா். அப்போது பள்ளத்தின் அடியிலிருந்த கழிவுநீா் குழாய் உடைப்பினால், தண்ணீரின் வேகம் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளம் விழுந்துள்ளது தெரியவந்தது.

இதையடுத்து ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளத்தை தோண்டி, குழாயிலிருந்து வெளியேறும் கழிவுநீா் நின்றவுடன் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டனா். இதனை சீரமைக்க இரண்டு நாள்கள் ஆகும் என மாநகராட்சி ஊழியா்கள் தெரிவித்தனா்.

இதற்கிடையே அப்பகுதி முழுவதும் அடைக்கப்பட்டு திருவானைக்காவல் பகுதியிலிருந்து ஸ்ரீரங்கம் செல்லும் வாகனங்களை திருவானைக்கா, மாம்பழச்சாலை, அம்மாமண்டபம் வழியாக திருப்பி விட்டனா். இதனால் சத்திரம்பேருந்துநிலையம் பகுதியிலிருந்து திருவானைக்காவுக்கு வரும் பயணிகள் மாம்பழச்சாலையில் இறங்கி நடந்தே வரவேண்டியிருந்து.

இதே பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சாலையில் இதுபோன்று பெரிய பள்ளம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com