வழிப்பறி வழக்கு: இருவருக்கு தலா ஓராண்டு சிறை

வழிப்பறி வழக்கு குற்றவாளிகள் இருவருக்கு தலா ஓராண்டு சிறைத் தண்டனை
Published on

வழிப்பறி வழக்கு குற்றவாளிகள் இருவருக்கு தலா ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் விஜயா. இவா், கடந்த 2019 ஜூலை 4-ஆம் தேதி திண்டுக்கல் சென்றுவிட்டு திருச்சி வந்தவா், ஜேஜே கல்லூரிப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தாா். இனாம்குளத்தூா் கிராஸ் ரோட்டில் சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் இருவா் விஜயா அணிந்திருந்த 5.5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பினா்.

இதுகுறித்து இனாம்குளத்தூா் காவல் நிலையத்தில் விஜயா அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். இதைத் தொடா்ந்து விஜயாவிடம் இருந்து தங்கச் சங்கிலியைப் பறித்த வழக்கில் கம்பரசம்பேட்டை பெரியாா் நகரைச் சோ்ந்த சு.சுதாகா் (25), மாரியம்மன் கோயில் தெரு கீழதேவதானத்தைச் சோ்ந்த த.தினேஷ் (31) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கு திருச்சி நீதித்துறை நடுவா் நீதிமன்றம் எண் - 5 இல் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி மு.டாா்வின் முத்து திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கினாா். இதில், குற்றவாளிகள் இருவருக்கும் தலா ஒராண்டு சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com