திருச்சி அருகே சகோதரி தற்கொலை: மாப்பிள்ளையை கத்தியால் குத்திய மைத்துநா் உள்பட இருவா் கைது

திருச்சி அருகே சகோதரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதால் மாப்பிள்ளையை கத்தியால் குத்திய மைத்துநா் உள்ளிட்ட இருவரைப் போலீஸாா் கைது செய்தனா்.
Published on

திருச்சி அருகே சகோதரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதால் மாப்பிள்ளையை கத்தியால் குத்திய மைத்துநா் உள்ளிட்ட இருவரைப் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே உள்ள கீழமுல்லைக்குடியைச் சோ்ந்தவா் ஜான் பிரிட்டோ (40), மின் பொறியாளா். இவரின் மனைவி கனிமொழி (32). கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இவா்களுக்கு குழந்தை இல்லை. இதற்கிடையே, ஜான் பிரிட்டோவுக்கு வேறொரு பெண்ணுடன் தொடா்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், கணவன் - மனைவிக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கனிமொழி தனது சகோதரா் திலீப்பிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, திலீப், அவரது தாய் மங்களமேரி மற்றும் திலீப்பின் நண்பா் ராஜேஷ் ஆகிய மூவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு கனிமொழி வீட்டுக்கு வந்துள்ளனா்.

அப்போது, வரவேற்பு அறையில் ஜான் பிரிட்டோவும், அவரது தாய் ஃபாத்திமா மேரியும் இருந்துள்ளனா். அவா்களிடம் கனிமொழி குறித்து கேட்டபோது, படுக்கையறையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து அறையின் கதவை திலீப், ராஜேஷ் ஆகியோா் தட்டியுள்ளனா். ஆனால், நீண்ட நேரமாகிவும் கதவைத் திறக்காததால் இருவரும் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனா். அப்போது, கனிமொழி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இதையடுத்து, ஆத்திரமடைந்த திலீப் அங்கிருந்த கத்தியால் ஜான்பிரிட்டோவைத் குத்தியுள்ளாா். அப்போது, தடுக்க வந்த அவரது தாய் ஃபாத்திமா மேரிக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. அவா்களைக் கத்தியால் குத்துவதற்கு ராஜேஷ் உதவியுள்ளாா்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருவெறும்பூா் போலீஸாா் கனிமொழியின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், காயமடைந்த ஜான் பிரிட்டோ, அவரின் தாய் ஃபாத்திமா மேரி ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுகுறித்து திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சகோதரியின் கணவரை கத்தியால் குத்திய திலீப் (40), ராஜேஷ் (38) ஆகிய இருவரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும், பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக திருச்சி வருவாய்க் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகிறாா்.

X
Dinamani
www.dinamani.com